சிலை உடைப்பு சம்பவங்களால் அதிருப்தி! - உள்துறை அமைச்சகத்துடன் மோடி ஆலோசனை

லெனின் சிலை

'தலைவர்கள் சிலை உடைக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க-வினர் வன்முறையைக் கையிலெடுத்தனர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை அடித்துநொறுக்கி, தொண்டர்களையும்  தாக்கினர். மேலும், பிரதான இடத்தில் இருந்த லெனின் சிலை புல்டோசரால் தகர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இதைப்பற்றி பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனப் பதிவிட்டார். ஹெச்.ராஜாவின் பதிவு, தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பதிவு நீக்கப்பட்டது. நேற்றிரவு (6/03/2018)  9 மணி அளவில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை, சிலர் கும்பலாக வந்து உடைத்தனர். இதையடுத்து அந்தப் பகுதியே பரபரப்பானது. பெரியார் ஆதரவாளர்களும் திரண்டனர். பா.ஜ.க நிர்வாகி முத்துராமன் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். 

’ஹெச்.ராஜா வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியுள்ளார். அவரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இன்று காலை, 'நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈ.வெ.ரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு, முகநூலின் Admin என் அனுமதி இன்றி பதிந்துள்ளார். எனவேதான், அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.  இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால், அதற்கு என் இதயப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’, என ஹெச்.ராஜா முகநூலில் பதிவுசெய்துள்ளார்

சிலை உடைப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரச்னை விஸ்வரூபம் எடுக்காமல் தடுக்க, பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனைக்குப் பின் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாட்டில் சில பகுதிகளில் நடந்த சிலை உடைப்பு போன்ற சம்பவங்களால் மத்திய அரசு அதிருப்தியில் உள்ளது. தலைவர்கள் சிலை உடைக்கப்படும் விவகாரத்தில், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!