வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (07/03/2018)

கடைசி தொடர்பு:12:34 (07/03/2018)

`சிலைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை!' - பா.ஜ.க-வினரை எச்சரித்த அமித்ஷா

தலைவர்களின் சிலையை உடைப்பதற்கு பா.ஜ.க. அரசு ஒருபோதும் அனுமதிக்காது என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினரால் வைக்கப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டது. இதைப்பற்றி கருத்து
தெரிவித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா  'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.  ஹெச்.ராஜாவின் பதிவு, தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பதிவு நீக்கப்பட்டது. நேற்றிரவு 9 மணி அளவில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை, சிலர் கும்பலாக வந்து உடைத்தனர். 

இந்த இரு சிலைகள் தொடர்பான விவகாரங்கள் தேசிய அளவில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி
தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்
, இவரைத் தொடர்ந்து தற்போது   பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் சில தினங்களாக நடைபெற்றுவரும் சிலை உடைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிருப்தி அளிப்பதாக உள்ளது இதுபோன்ற செயல்களுக்கு பா.ஜ.க. ஒருபோதும் ஆதரவு அளிக்காது. திரிபுரா மற்றும் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க-வினரிடம் கட்சி மேலிடம் விசாரணை நடத்தும். அப்படி இந்தச் சம்பவங்களில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தால் கட்சி அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கும். வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொள்வதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது, இது போன்ற செயல்களின் மூலம் மக்களின் வாழ்க்கையும் புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளும் பாதிக்கப்படுகிறது என அவர் பதிவிட்டிருந்தார்.