வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (07/03/2018)

கடைசி தொடர்பு:16:57 (07/03/2018)

உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு! - மர்ம நபர்கள் அட்டூழியம்

திரிபுரா மற்றும் தமிழகத்தில் நடந்த சிலை உடைப்பு சம்பவங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலை

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டு கால மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. பா.ஜ.க அங்கு ஆட்சியமைக்க உள்ளதைத் தொடர்ந்து தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க-வினர் வன்முறையைக் கையிலெடுத்துள்ளனர். பிரதான இடத்தில் இருந்த லெனின் சிலை புல்டோசரால் தகர்க்கப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். அதன் விளைவாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை, பா.ஜ.க நகரச் செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் கல் எறிந்து சேதப்படுத்தினர். போலீஸார் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலையைச் சேதப்படுத்திய திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் முத்துராமன் பா.ஜ.க-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது உத்தரப்பிரதேசத்தில் மீரத் பகுதியில் மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் மீரத் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க