வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (07/03/2018)

ஆபீஸ் ரூமில் இருந்த நீதிபதி பி.விஷ்வநாத் ஷெட்டியைச் சரமாரியாகக் குத்திய வாலிபர்!

கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி பி.விஷ்வநாத் ஷெட்டியை, தேஜாஸ் சர்மா என்பவர், அவரின் அலுவலகத்துக்கே சென்று மூன்று முறை கத்தியால் குத்தியுள்ளார். 

பி.விஷ்வநாத் ஷெட்டி

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.விஷ்வநாத் ஷெட்டி (73). இவர், தற்போது கர்நாடக லோக் ஆயுக்தாவின் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். இன்று, எப்போதும்போல, கர்நாடக லோக் அயுக்தா அலுவலகத்தில் தனது வேலையைச் செய்துகொண்டிருந்தார். 

அப்போது, அங்கு வந்த தேஜாஸ் சர்மா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மூன்று முறை விஷ்வநாத் ஷெட்டிமீது குத்தியுள்ளார். இதனால், படுகாயம் அடைந்த அவரை, மீட்டு மருத்துவமனையில் அலுவலக அதிகாரிகள் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மருத்துவமனைக்கு நேரில் சென்று நீதிபதியிடம் நலம் விசாரித்தார். 

சித்தராமையா

இந்தச் சம்பவத்தையடுத்து, தேஜாஸ் சர்மாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தேஜாஸ் சர்மா தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், கட்டட கான்ட்ராக்டர் தொழில் செய்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், டெண்டர் விவகாரத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பால் ஆத்திரமடைந்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.