'பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகியது தெலுங்கு தேசம்' - சந்திரபாபு நாயுடு அதிரடி!

பா.ஜ.க-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு

2018-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை கடந்த மாதம் 1-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது.  விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட் இருப்பதாக பா.ஜ.க தெரிவித்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட் மீது அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பா.ஜ.க-வின் முக்கிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம், மத்திய பட்ஜெட் மீது கடும் அதிருப்தி தெரிவித்தது. ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால்,  பட்ஜெட் மீது அக்கட்சி அதிருப்தி தெரிவித்தது. 

சந்திரபாபு நாயுடு

இதனால், பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து கடந்த மாதம் 4-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இருப்பினும், அந்த முடிவை கைவிட்ட அக்கட்சி, சிறப்பு நிதி பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவது என முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர். பின்னர், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மறைமுகமாக  மத்திய அரசை விமர்சித்து வந்தனர். இதனால், இருகட்சிகளுக்கு இடையே தொடர்ந்து மனக்கசப்பு இருந்து வந்தது. 

இந்நிலையில், பா.ஜ.க-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் வகையில் மத்திய அமைச்சர்களாக உள்ள அக்கட்சியை சேர்ந்தவர்களை சந்திரபாபு நாயுடு பதவி விலக கூறியுள்ளார். இதனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் ஒய்.எஸ்.சவுத்திரி மற்றும் கஜபதி ராஜு ஆகிய இருவரும் தங்களது பதவிகளை நாளை ராஜினாமா செய்வார்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து, ஆந்திர தலைநகர் அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பட்ஜெட் வெளியானது முதல், தொடர்ந்து எங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. நாங்கள் கூறுவதை கேட்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை. இதற்காக 4 ஆண்டுகளாக பொறுமையாக இருந்திருக்கிறோம். இதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இது எங்கள் உரிமையாகும். மூத்த அரசியல்வாதி என்ற முறையில் எங்கள் முடிவை தெரிவிக்க பிரதமரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!