சொந்த வீடு இல்லை... கட்சி அலுவலகத்தில் உறக்கம்! - மலைக்கவைக்கும் மாணிக் சர்க்கார்

தனக்கென சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியேறியுள்ளார் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். 

 மாணிக் சர்க்கார்

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், திரிபுராவில் மொத்தம், 59 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, 25 ஆண்டுகள் திரிபுராவை ஆட்சி செய்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்தது. 

அதனால், திரிபுரா முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மிகவும் எளிமையானவராகத் திகழும் மாணிக் சர்க்கார், தனக்கென சொந்தமாக வீடுகூட இல்லாத நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன், தான் குடியிருந்த அரசு வீட்டைக் காலி செய்துள்ளார்.

மாணிக் சர்க்கார்

சொந்த வீடு இல்லாத நிலையில், உறவினர்கள் அழைத்தும், அவர்களது வீட்டில் தங்காமல், திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தன் மனைவியுடன் குடியேறி நெகிழவைத்துள்ளார். கட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் அவரும் அவரின் மனைவி பாஞ்சாலி சர்க்காரும் தங்கியுள்ளனர். வசதிகள் இல்லாத சாதாரண அறையில், தங்கி தங்களது பணிகளை வழக்கம்போல் மேற்கொண்டு வருகின்றனர். 

"முதல்வர் பதவியில் இல்லாத நிலையில் வீட்டை காலி செய்து கொடுப்பதுதான் சரியானது. உடனடியாக வீட்டையும் காலி செய்து விட்டேன். உறவினர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், எனக்கு கட்சி அலுவலகத்தில் தங்குவதுதான் விருப்பம்'' என்று மாணிக் சாகர்  தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் மாணிக் சர்க்கார் இருப்பதால்  புதிய அரசு அவருக்கு குடியிருக்க வீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

1998-ம் ஆண்டு முதல் திரிபுரா முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார் இந்த தேர்தலின் போது, அஃப்டவிட்டில் வங்கிக் கணப்பில் ரூ.2,410 இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அகர்தாலாவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் மாணிக் சர்க்காருக்கு கணக்கு உள்ளது. கையிருப்பாக வெறும் ரூ.1,520 மட்டுமே வைத்திருப்பதாக கூறியிருந்தார். மாணிக் சர்க்காருக்கு என்று சொந்தமாக மொபைல்போன்கூட இல்லையென்றே அவரின் அஃப்டவிட் சொன்னது. 

மாணிக் சர்க்காரின் மனைவி பஞ்சாலி பட்டாச்சர்ஜி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் 20,140 கையில் இருப்பாகவும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் ரூ.12 லட்சம் சேமிப்பாக வைத்துள்ளார். 20 கிராம் தங்க நகை சொந்தமாக உள்ளது.முதல்வரின் மனைவியாக இருந்தாலும் பஞ்சாலி சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணம் செய்கிறார். மாணிக் சர்க்காருக்கு சகோதரர்களுடன் சேர்ந்து சிறிய நிலம் பரம்பரை சொத்தாக உள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!