`லவ் ஜிகாத் அல்ல; ஹதியா திருமணம் செல்லும்!' - உச்ச நீதிமன்றம் அதிரடி

`ஹதியா திருமணம் செல்லாது' என்று கேரளா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது. ' பெண்கள், தங்களுடைய வாழ்க்கை துணையைத் தேட முழு உரிமை உள்ளது' எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் நீதியசரர்கள். 

ஹதியா

கேரள மாநிலம், கோட்டயத்துக்குட்பட்ட வைக்கம் ஊரைச் சேர்ந்த அசோகன் மணி, பொன்னம்மா ஆகியோரின் மகள் அகிலா. இவர், 2015-ம் ஆண்டு சேலம் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த காலத்தில், செபின் ஜகான் என்ற இளைஞர் மீது காதல் கொண்டார்.

இதையடுத்து, இஸ்லாம் மதத்துக்கு மாறினார் அகிலா. தன்னுடைய பெயரையும் ஹதியா என மாற்றிக்கொண்டார். இதனால், குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளான ஹதியா, தோழிகள் வீட்டில் தங்கியிருந்தார். இதனை எதிர்பார்க்காத ஹதியாவின் பெற்றோர், கேரள உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 

இதன்பிறகு, காதலர் செபின் ஜகானைத் திருமணம் செய்துகொண்டார் ஹதியா. இந்தத் திருமணத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ' இது ஒரு லவ் ஜிகாத். இந்தத் திருமணம் செல்லாது' எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ஹதியா. இன்று இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், ' பெண்களுக்குத் தங்களது வாழ்க்கை  துணையைத் தேட முழு உரிமை உள்ளது. கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம்'  என உத்தரவிட்டுள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!