வெற்றி பெறுமா சோனியா காந்தியின் புதிய கூட்டணி வியூகம்? | Sonia invites all party leaders for feast: Will it be convert into new electoral alliance ?

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (09/03/2018)

கடைசி தொடர்பு:11:10 (09/03/2018)

வெற்றி பெறுமா சோனியா காந்தியின் புதிய கூட்டணி வியூகம்?

சோனியா காந்தி

த்தியில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைய உள்ளது. அடுத்த ஆண்டு, அதாவது 2019 மே மாதத்திற்குள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, இந்த ஆண்டு ஆளும் பி.ஜே.பி-க்கு மட்டுமல்லாது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இதரக் கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமான ஆண்டாகப் பார்க்கப்படுகிறது.

திரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சியைத் தோற்கடித்து பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்துள்ள நிலையிலும், நாட்டின் 21 மாநிலங்களில் பி.ஜே.பி. அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள நிலையிலும் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

திரிபுரா வெற்றியைத் தொடர்ந்து, 'தங்களின் அடுத்த இலக்கு கர்நாடகம்தான்' என்று பி.ஜே.பி. தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி, பி.ஜே.பி. அல்லாத இதர எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ராகுல் காந்திஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதோடு, அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக ராகுல் காந்தி முடிசூட்டிக் கொண்ட பின்னர் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் மாநில அரசுகளைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகளை எழுப்பிவரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளை வரும் 13-ம் தேதி அன்று விருந்துக்கு அழைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பி.ஜே.பி-க்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்த அழைப்பை விடுத்திருப்பதாகவே தெரிகிறது. திரிபுரா உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தல்களுக்குப் பின்னர் நடைபெறும் கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சந்திரசேகர ராவ்மேலும் காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ள சூழலில், சோனியா காந்தியின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களை ஓரணியில் திரட்டுகிற அதிரடி நடவடிக்கையில் சோனியா காந்தி இறங்கி உள்ளார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சோனியா காந்தியின் இந்தக் கூட்டம், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒன்றுபட்டு செயல்பட வழிவகுக்கும். இது வெறும் விருந்து நிகழ்ச்சி மட்டுமல்ல; மத்திய பி.ஜே.பி. அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு, புதிய அணியை உருவாக்குவதற்கான முன்னோட்டமாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் பலத்தைக் காட்டுவதாகவும் அமையும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்றார்.

திருணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களையும் இந்த விருந்து நிகழ்ச்சியில் இடம்பெறச்செய்வதில் சோனியா காந்தி தீவிரமாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அளவிலான ஆலோசனைக் கூட்டம் வரும் 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சோனியா ஈடுபட்டிருப்பதால், 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குக் கூட்டணி அமைப்பதற்கான அடித்தளமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பி.ஜே.பி. கூட்டணியில் இருந்த சிவசேனா வெளியேறியுள்ள நிலையிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் போன்ற கட்சிகள், அதிருப்தியில் உள்ள சூழ்நிலையிலும் அந்தக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதுடன், பிஜூ ஜனதா தளம், திருணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சேர்த்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சோனியா காந்தி இப்போதே இறங்கி விட்டார்" என்றார். 

சோனியா காந்தியின் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வியூகம் வெற்றி பெறுமா என்பது போகப்போகத்தான் தெரியும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close