வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (09/03/2018)

கடைசி தொடர்பு:07:30 (09/03/2018)

'ரூ.5-க்கு சானிடரி நாப்கின்' - அசத்தும் மேற்கு ரயில்வே!

மும்பை - டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை மேற்கு ரயில்வே பொருத்தியுள்ளது.

சானிடரி நாப்கின்

photo credit: ANI

ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘பேட்மேன்’.  பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையைப் பேசும் படமாக இப்படம் வெளியானது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் #PadManChallenge வைரலானது. #PadManChallenge சவாலை முதலில் தொடங்கிவைத்தவர், அருணாச்சலம் முருகானந்தம். அக்‌ஷய் குமார் மற்றும் அவரின் மனைவி டிவிங்கிள் கண்ணாவுக்கு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு பதிவிட்டார். இதையடுத்து, #PadManChallenge மிகவும் பிரபலமானது. திரைப்பிரபலங்கள் கையில் நாப்கினைப் பிடித்து போஸ் கொடுத்துனர்.

இதேபோல ’நாங்களும் #PadManChallenge ஏற்றுக்கொள்கிறோம்’ என்று அறிவித்து, பெண்களுக்காக இலவச நாப்கின் வழங்கும் இயந்திரத்தைத் தங்களது தியேட்டர் வளாகத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனம் பொருத்தியது. இந்நிலையில், மும்பை - டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்காக மேற்கு ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. ரூ.5-க்கு நாப்கின் கிடைக்கும் வகையில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயின் இந்த முயற்சிக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மேற்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், "இந்தியாவிலேயே முதல்முறையாக ராஜ்தானி ரயிலில்தான் நாப்கின் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. தொலைதூரம் பயணிக்கும் பெண்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவும். விரைவில் இத்திட்டத்தை மற்ற ரயில்களிலும் ஆரம்பிக்க உள்ளோம்" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க