'பெரியாரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்?' - சித்தராமையா சுளீர்

'பெரியாரைப் பார்த்து பா.ஜ.க-வுக்கு ஏன் பயம் வருகிறது' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்தராமையா

திரிபுராவில், சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரால் வைக்கப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா,  'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். ஹெச்.ராஜாவின் இக்கருத்து, தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலின், வைகோ, எடப்பாடி பழனிசாமி என அரசியல் தலைவர்கள் இதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தன்னைக் கேட்காமல் அட்மின் அவதூறாகப் பதிவிட்டுள்ளார் என்று கூறி அப்பதிவை ராஜா நீக்கினார். இருப்பினும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை, சிலர் கும்பலாக வந்து உடைத்தனர். அவர்களை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பெரியார் சிலையை சேதப்படுத்திய பா.ஜ.க-வினரின் காழ்ப்புணர்ச்சியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சாதிய அமைப்புகளால் அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு சுய மரியாதையை வழங்கியவர் பெரியார். சமூக சீர்திருத்தவாதியான பெரியாரைப் பார்த்து, பா.ஜ.க-வுக்கு ஏன் பயம் வருகிறது. பா.ஜ.க-வின் வர்க்க ஏற்றத்தாழ்வு கொள்கைகளை இதன்மூலமாக மக்கள் பார்க்க முடியும்" எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!