வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:14:25 (09/03/2018)

`காவிரியில் கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது உண்மை' - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்

மாசு கலந்த நீரைத்தான் கர்நாடகா தமிழகத்துக்கு வழங்குவதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில், தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பல மோதல்கள் நிலவிவருகின்றன. பல வருடங்களாக இந்த வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த மாதம் இதன் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இது தொடர்பான
ஆலோசனைக் கூட்டங்களும் காவிரிப் பங்கீடு தொடர்பாகப் பல விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், முன்னதாகக் கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், கழிவு கலந்தே தமிழகத்துக்கு வருவதாகவும் அதைத் தடுக்க வேண்டும் எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மனு தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுசெய்து மனுத்தாக்கல் செய்யுமாறு கூறியிருந்தது.

இன்று, கழிவுநீர் கலப்பது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில் கர்நாடகா, தமிழகத்துக்குத் திறந்துவிடும் காவிரி நீரில் அதிக அளவு கழிவு கலந்து வருவதாகவும், இந்தக் கழிவு கலந்த நீரை உபயோகப்படுத்துவதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்த வழக்கு மீதான விசாரணை விரிவாக நடைபெறும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் இன்றைய வழக்கை ஒத்திவைத்தது.