ஜஸ்டின் ட்ரூடோவை 'அகதிகளின் காவலன்’ ஆக்கிய துயர சம்பவம்! #KomagataMaru | What was the Komagata Maru incident and why canada pm apologised

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (09/03/2018)

கடைசி தொடர்பு:15:06 (09/03/2018)

ஜஸ்டின் ட்ரூடோவை 'அகதிகளின் காவலன்’ ஆக்கிய துயர சம்பவம்! #KomagataMaru

ஸ்டின் ட்ரூடோ... சமீபகாலமாக இவரை சமூக வலைதளங்களில் தமிழராகவே மாற்றிவிட்டார்கள். இந்தியாவில் எட்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, தமிழகத்துக்கு வரவில்லையென்றாலும் அவர் மீது இனம் புரியாத அன்பு ஏற்பட்டுள்ளது நிஜம்தான். ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் ஹீரோவான கதைக்குப் பின்னால், ஒரு சோகக் கதையும் இருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு, கனடாவில் லிபரல் கட்சி ஆட்சியமைத்தது. பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்ற பிறகு, நாடாளுமன்றத்தில் இந்தியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். மன்னிப்புக்குப் பின்னால் இருக்கும் துயரக்கதை இதுதான்!

சிரியாவில் இருந்து வெளியேறும் சிறுவன்

1914-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்,  ஹாங்காங்கிலிருந்து `கோமகட்டமாரு' என்ற  ஜப்பானியக் கப்பல் கனடா நோக்கிப் பயணிக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த சீக்கிய வர்த்தகர் குர்தீத் சிங் என்பருக்கு சொந்தமான இந்தச் சரக்குக் கப்பல், பயணிகள் கப்பலாக மாற்றப்பட்டு, 340 சீக்கியர்கள், 24 இஸ்லாமியர்கள், 12 இந்துக்கள் பயணித்தனர். கப்பலில் இருந்தவர்கள், பிரிட்டனின் உலகையே கட்டுப்படுத்தும் வெறிக்காக பல நாடுகளில் அந்த நாட்டு ராணுவத்துடன் சேர்ந்து போரிட்டவர்கள், பணியாற்றியவர்கள்; பிரிட்டிஷாரின் சமநீதிக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள். அதனால் பிரிட்டனின் கீழ் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் கொலம்பியாவில் சென்று வேலைதேடிக்கொண்டு செட்டிலாகிவிட வேண்டும், சுபிட்ஷமாக வாழ வேண்டும் என்ற ஆசையுடன் புறப்பட்டனர். ஷாங்காய், யோகஹாமா வழியாக கனடாவின் வான்கூவர் நகரை கோமகட்டமாரு சென்றடைந்தது. வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கப்போகிறோம் என்பதை கப்பலில் இருந்தவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை. 

1908-ம் ஆண்டு இயற்றப்பட்ட கனடா குடியுரிமைச் சட்டப்படி, கனடாவுக்கு அகதிகளாக வருபவர்கள் தாய்நாட்டில் இருந்துதான் புறப்பட வேண்டும்.  டிக்கெட்களும் தாய்நாட்டில் இருந்துதான் வாங்கியிருக்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே கனடாவுக்குள் நுழைய முடியும். அந்தச் சட்டத்தின்படி, `கோமகட்டமாரு' இந்தியாவிலிருந்து  நேரடியாக வான்கூவர் சென்றிருந்தால் அதில் இருந்தவர்களுக்கு கனடாவில் அடைக்கலம் கிடைத்திருக்கும். ஹாங்காங்கில் இருந்து கப்பல் புறப்பட்டதால், கனடா அரசு அவர்களை ஏற்க மறுத்தது. `நீங்கள் இந்தியாவில் பிறந்து, சீனாவுக்குச் சென்று அங்கிருந்து கனடாவுக்குப் பயணப்பட்டுள்ளதால், உங்களைக் கனடாவுக்குள் அனுமதிக்க முடியாது' என்று அரசு கராறாகக் கூறியது. கப்பலில் இருந்த 24 பேருக்கு மட்டுமே கனடாவுக்குள் நுழைய அனுமதி கிடைத்தது. மற்றவர்கள் இரண்டுமாத காலம் கப்பலிலேயே இருந்தனர். கப்பலில் உணவுப்பொருள் தீர்ந்துகொண்டேபோனது. கனடா அரசு, கிஞ்சித்தும் இறங்கவில்லை. கனவில் கண்ட பிரிட்டிஷ் கொலம்பியாவின் கோரமுகத்தை நேரில் கண்ட கப்பலில் இருந்த இந்தியர்கள், கண்ணீர்விட்டு அழுதனர். 

ஒருகட்டத்தில் கப்பல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. கப்பலில் இருந்தவர்கள் இந்தியர்கள் என்பதால், கொல்கத்தாவில் இறக்கிவிட கப்பல் கேப்டன் முடிவுசெய்தார். கப்பலில் இருந்தவர்கள் பசியாலும் அலுப்பாலும் பெரும் துயரத்தில் இருந்தனர். தாய்மண்ணை மிதித்தபோது, கொடூரத்தின் உச்சத்தையும் பார்த்தனர்.  கொல்கத்தா துறைமுகத்துக்குள் நுழைந்த கப்பலுக்குள்  பிரிட்டிஷ் படையினர் நுழைந்தனர். கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால், பெரும் மோதல் மூண்டது.  துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் கடலில் குதித்துத் தப்பித்தனர்.  மற்றவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். சர்வதேச அரங்கில் கனடாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய துயரச் சம்பவம்தான் இது. `கனடா அரசின் கருணையற்றச் செயலால்தான் அகதிகள் மரணமடைந்தனர்' என்று உலகமே குற்றம் சாட்டியது. இதை `பஜ்பஜ் கொலைகள்' என்று வரலாற்றில் சொல்வார்கள். 1952-ம் ஆண்டு கொல்கத்தா அருகே உள்ள பஜ்பஜ் நகரத்தில் `கோமகட்டாமாரு' சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா நினைவுச்சின்னம் எழுப்பியது. பிரதமர் நேரு அதை திறந்துவைத்தார். 

அகதிகள் சென்ற கோமகட்ட மாரு கப்பல்

கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்ற பிறகு, இந்தச் சம்பவத்துக்காகத்தான் இந்தியர்களிடம்  மனம்திறந்து மன்னிப்பு வேண்டினார். இந்த ஒரு சம்பவத்தைத் தவிர, கனடாவின் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் அகதிகளுக்கு சொர்க்கபூமிதான். ஹங்கேரி, கொசவா, சைனீஸ், வியட்நாம், யூதர்கள், தமிழர்கள்... கறுப்பு வெளுப்பு என்று பார்க்காது மக்களை சக மனிதர்களாக அரவணைத்துக்கொள்ளும் நாடு கனடா. யார் வேண்டுமானாலும் வரலாம். கனடாவில் சுபிட்ஷமாக வாழலாம். அகதிகளாகப் போனாலும் அந்த நாட்டின் ஓர் அங்கமாகவே மாறிப்போவார்கள். நம் நாட்டில் இலங்கை அகதிகளுக்கு என்று ஒரு முகாமை, தனிக் குடியிருப்புகளை ஏற்படுத்தி தனியே பிரித்துவைப்பதில்லை. சுதந்திரமாக வேலை தேடிக்கொள்ளலாம். தனியாக ஃப்ளாட் எடுத்துக் குடும்பத்துடன் தங்கிக்கொள்ளலாம். ஆங்கிலம் அறிந்துகொள்வதும், அந்த நாட்டுக்கு ஏற்றவகையில் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதும்தான் அகதிகள் முன் நிற்கும் சவால்கள். 

2015-ம் ஆண்டு,  சிரியாவில் உள்நாட்டுப் போர் வலுத்த சமயம். அரசுப் படைகளுக்கு இணையாகக் கிளர்ச்சியாளர்களும் பலம் பெற்றிருந்த காலகட்டம் அது. குண்டுவீச்சுகளைத் தாங்க முடியாத சிரியா மக்கள், பல நாடுகளைத் தேடி சிதறி ஓடினர். ஐரோப்பிய நாடுகள், ஏற்றுக்கொள்ள மறுத்தன. ஆஸ்திரேலியா, கதவை அடைத்துக்கொண்டது.  வளைகுடா நாடுகளும்  சிரியா மக்களைச் சீண்டவில்லை. படகு வழியாகத் தப்பியவர்களை கடலும் காவுகொண்டது.  இந்தச் சமயத்தில், கனடா மட்டுமே சிரியா மக்களை அரவணைத்தது. ஜஸ்டின் ட்ரூடோ, தன் தனிப்பட்ட அக்கறையால் 25 ஆயிரம் சிரியா அகதிகளை மீட்டு கனடாவுக்குக் கொண்டுவந்தார்.

தொடர்ச்சியாக, 2016-ம் ஆண்டு 46,700 அகதிகள் கனடாவில் குடியேறினர். சிரியாவைச் சேர்ந்தவர்கள்தான் (அதிகபட்சமாக 33,226 பேர்) கனடாவில் தஞ்சமடைந்தனர். இதே ஆண்டில்  எரித்ரியா (3,934), ஈராக் (1,650), காங்கோ (1,644), ஆப்கான் (1,354) நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கனடா அடைக்கலம் கொடுத்தது. முன்னதாக 1978-ம் ஆண்டு 40,271 மக்கள் அதிகபட்சமாகக் கனடாவில் தஞ்சமடைந்தனர். உலக அளவில் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் கனடாவுக்கு இரண்டாவது இடம். 

அகதிகளை வரவேற்கும் ஜஸ்டின் ட்ரூடோ

தங்கள் நாட்டில் அடைக்கலம் புகும் மக்களுக்காக `Resettlement Assistance Program' என்ற திட்டத்தை கனடா அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அகதிகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கனடா வரும் அகதிகளுக்கு விமானநிலையத்திலோ துறைமுகத்திலோ சிறப்பான வரவேற்பளிக்கப்படும்.  இந்த வரவேற்பு நிகழ்வே அவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக அமையும்.  சில சமயங்களில் ஜஸ்டின் ட்ரூடோவே விமானநிலையத்துக்குச் சென்று அவர்களை வரவேற்று மகிழ்வார்.

முதலில், தற்காலிகமாக தங்கும் இடம் வழங்கப்படும். பிறகு, நிரந்தரமான வீடு அளிக்கப்படும். போன் இணைப்புகள் வழங்கப்படும். எந்த நகரத்தில் வாழ விரும்புகிறார்களோ அந்த நகரத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். உள்நாட்டு காலநிலை, பஸ், ரயில் விமானப் போக்குவரத்து, கல்விமுறை, கனடா நாட்டுச் சட்டம் குறித்த விளக்கமும் அகதிகளுக்கு அளிக்கப்படும். வங்கிக்கணக்கு தொடங்க, கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுவதோடு, ஒரு வருடத்துக்கான வாழ்வாதாரத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும்.

கனடா மக்களும் அகதிகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு நிதியுதவி செய்வதும் இங்கே வாடிக்கை. அதுவும், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகப் பதவியேற்ற பிறகு, கனடாவில் தஞ்சம் புகும் அகதிகள், அந்த நாட்டின் செல்லக்குழந்தைகளாகவே மாறிப்போனார்கள். அதனால்தான் என்னவோ... கனடாவில் பிறந்த சில சிரியாக் குழந்தைகள் `ஜஸ்டின்' என்ற பெயருடன் அங்கே உலவிக்கொண்டிருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்