வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (09/03/2018)

கடைசி தொடர்பு:16:40 (09/03/2018)

`தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடவில்லை’ - கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் விளக்கம்

மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் நடத்திய, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

காவிரி

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறைச் செயலர் பிரபாகர் மற்றும் காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 

காவிரி நதிநீர் தொடர்பாகக் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அன்று, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 4 வாரங்கள் கடந்த நிலையில், இன்று காவிரி நதிநீர் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து மாநில அரசுகள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். நான்கு மாநில அரசுகளும் காவிரி நதிநீர் தொடர்பாகத் தொடர்பான செயல் திட்டத்தை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக் கேட்டுக்கொண்டது. 

காவிரி

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர், நீர் வளத்துறைச் செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், மேலாண்மை வாரியம் என்ற சொல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்போது குறிப்பிடவில்லை. திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருந்தது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது என்றார்.