விசாரணையில் தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறார்கள்... கதறும் கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை வரும் 20-ம் தேதி வரை கைதுசெய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது
டெல்லி உயர் நீதிமன்றம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் வழக்கு உச்ச நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 7 மற்றும் 8-ம் தேதி சென்னையில் நடைபெற்ற
சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் போன்றவை சிக்கியுள்ளதாகவும் அதனால் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 6 நாள்கள் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஓராண்டாக விசாரணை மேற்கொண்டும் சி.பி.ஐ கூறும் பிரதான ஆவணமான நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழைக் கண்டு பிடிக்க முடியவில்லை எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஒரு நிறுவனத்தின் பதிவை ஓர் ஆண்டாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை மோசமான நிலையில் உள்ளது என்பது தெரிகிறது. ஆனால், தற்போது புதிய ஆதாரம் கிடைத்துள்ளது எனக் கூறி காவலை நீட்டிக்கக் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இரவு நேரங்களில் கார்த்தி சிதம்பரத்தைத் தூங்கவிடாமல் அதிகாரிகள் பேசிக்கொண்டே இருப்பதாகவும் கார்த்தியின் அறையில் இரவு முழுவதும் விளக்கை எரியவிட்டு பக்கத்து அறையில் அதிகாரிகள் சீட்டு விளையாடிக்கொண்டிருப்பதாகவும் விசாரணை என்ற
பெயரில் இரவு 2.30 மணிவரையிலும் அதிகாலை 6 மணியிலும் கேட்ட கேள்வியைத் திரும்பக் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கார்த்தி சிதம்பரம் தரப்பு, சி.பி.ஐ அதிகாரிகள்மீது குற்றம் சாட்டியது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் , கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது எனக் கூறி வரும் 20-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இந்த வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கார்த்தி சிதம்பரத்தைக் கூடுதல் நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ தரப்பு கோரிக்கை விடுத்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை மார்ச் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!