வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (09/03/2018)

மனைவியின் அடுத்தடுத்த புகார்கள்...சிக்கித் தவிக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஷமி!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், முகமது ஷமியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, மேட்ச் பிக்சிங் மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முகமது ஷமி

கடந்த சில நாள்களுக்கு முன்பு, அவரின் மனைவி போலீஸிடம், முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றும் கொலை செய்வதாக மிரட்டி வருகின்றனர் எனப் புகார் அளித்தார். மேலும், முகமது ஷமிக்குப் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்து வருவதாகவும், மேட்ச் பிக்ஸிங் போன்ற சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

இந்தக் குற்றச்சாட்டை முகமது ஷமி மற்றும் அவரின் குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்துவிட்டனர். மேலும், இந்தப் புகார் குறித்து முகமது ஷமி கூறுகையில், தனது மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தான் யாருடனும் சேர்ந்து மேட்ச் பிக்ஸிங் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் காவல் நிலையத்தில், ஷமியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது, கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்தப் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் ஹசின் ஜஹான் கூறுகையில், ‘எனக்கு இதுவரையிலும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால், எனது  பிரச்சனைகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். பதிவுகள் அனைத்தையும் எனது அனுமதியின்றியே ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எனது ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.