மும்பை போலீஸை கலங்கடித்த ட்விட்டர் பதிவு..!

சமூக வலைதளங்களில் மக்களைக் கண்காணிக்கும் மும்பை மாநகர காவலின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான
சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமூக வலைதளங்களுக்குத் தற்கால இளைஞர்கள் அடிமையாகிவிட்டனர். சமூக பக்கங்களில் இதைத்தான் பதிவு செய்ய வேண்டும், இதைப் பதிவிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் இளைஞர்களுக்குச் சிறிதும் இல்லை. தங்கள் வாழ்வில் அன்றாடம்  நடக்கும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதில் வரும் லைக்குகள் மற்றும் கமெண்டுகள் தரும் மகிழ்ச்சியைச் சாதனையாகக் கருதுகிறார்கள் தற்கால இளைஞர்கள்.

இதன் விளைவாகத்தான் பல ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி என்ற பெயரில் தங்களின் உயிரையும் மாய்த்துக்கொள்ள நேருகிறது.
சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிட்டு தற்கொலை செய்பவர்களும் உள்ளனர். இந்த நிலையை மாற்ற மும்பை காவல்துறை, சமூக வலைதளங்களில் மக்கள் செய்யும் பதிவுகளைக் கண்காணித்து வருகிறது. மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் அல்லது சில
குறிப்பிடத் தகுந்த விஷயங்களைப் பதிவிட்டால் அதற்கு உடனடியாக மும்பை காவல்துறை பதிலளித்து அந்தப் பிரச்னையைச் சரி செய்ய
முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மும்பை வாசியான ஒருவர் தன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அதைப் புகைப்படமெடுத்து வெட்டப்போகிறேன் என்ற பாணியில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்காணித்த மும்பை காவல்துறை அப்படி எதுவும் செய்ய வேண்டாம் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் எனக் கூறி பதிவிட்டவரின் முகவரியைக் கேட்டுள்ளனர். அதற்கு பதிவிட்ட நபர், நான் என் கையில் உள்ள முடிகளை வெட்டவே இவ்வாறு பதிவிட்டிருந்தேன். என் பதிவை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்திடுங்கள் எனப் பதிலளித்திருந்தார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!