கந்து வட்டி கொடுமையால் தீவைத்து கொளுத்தப்பட்ட வட இந்தியப் பெண்!

உத்தரபிரதேச மாநிலம் ஜஜாவுலி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினப் பெண் ஒருவரை, கந்து வட்டிக்காக வீடு புகுந்து தீவைத்து எரித்துள்ளனர். அந்தப் பெண், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீ

ஜஜாவுலி கிராமத்தில் உள்ள பாலியா பகுதியில் வசித்து வருபவர் ரேஷ்மான தேவி(45). அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம், தனது குடும்ப விழாவிற்காக 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்திற்கான வட்டித் தொகையை சரியாகக் கட்டியுள்ளார். மேலும், அசல் தொகையான 20 ஆயிரம் ரூபாயையும் திருப்பித் தந்துள்ளார். 

இந்நிலையில், வட்டிக்கு பணம் தந்தவர், இன்னும் வட்டி பாக்கி உள்ளது என்று கூறியுள்ளார். இதனால், கோபம் அடைந்த ரேஷ்மான தேவி, அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அதனால், நேற்று இரவு ரேஷ்மாவின் வீட்டிற்குள் நுழைந்த சிலர், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேஷ்மான தேவி ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!