வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (10/03/2018)

கடைசி தொடர்பு:13:05 (10/03/2018)

ரபேல் ஒப்பந்தத்தால் ரூ.12,000 கோடி இழப்பு..! - குலாம் நபி ஆசாத் தாக்கு

'பாதுகாப்பு ஜெட் விமானங்கள் வாங்கியதில் 12,000 கோடி ரூபாய் இழப்பு நடைபெற்றுள்ளது' என்று காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். 

பாதுகாப்பு ஜெட் விமானங்கள் வாங்கியதற்கான ரபேல் ஒப்பந்தம்குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ரன்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள், 'இந்தியாவின் பாதுகாப்பில் பா.ஜ.க அரசு சமரசம்செய்துள்ளது. 2012-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு ஜெட் விமானம் 526 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்செய்யப்பட்டது. ஆனால் மோடி அரசு, ஒரு ஜெட் விமானம் 1,670 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

126 ஜெட் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் 36 ஜெட் விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. இது, நாட்டுப் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வது இல்லையா? 126 ஜெட் விமானங்கள் வாங்குவதற்கான காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தை மோடி அரசு ரத்துசெய்யாமல் இருந்திருந்தால், 41,212 கோடி ரூபாய் சேமித்திருக்கலாம். 2016-ம் ஆண்டு, 36 ஜெட் விமானங்கள் 7.5 பில்லியன் யூரோவுக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளது.

ஆனால் 2015-ம் ஆண்டு, 48 ஜெட் விமானங்களை கத்தார் மற்றும் எகிப்துக்கு 7.9 பில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டுள்ளது. இதனை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, இந்தியாவுக்கு ஒரு ஜெட் விமானம் 1,670 கோடி ரூபாய்க்கும், கத்தார் மற்றும் எகிப்துக்கு ஒரு ஜெட் விமானம் 1,319 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டது தெரிகிறது. ஒரு ஜெட் விமானம், 351 கோடி ரூபாய் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. அதனால், இந்தியாவுக்கு 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.