'பொதுமக்களுடன் அதிகாரிகள் ஒன்றிணைந்தால் நாட்டின் வளர்ச்சி மேலோங்கும்!' - மோடி

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாடு, இன்று  நடைபெற்றுவருகிறது. 

மோடி

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் முயற்சியின் காரணமாக நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மைய அறையில் நடைபெறும் இந்த மாநாட்டை, இன்று காலை 9.30 மணி அளவில், பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, ''ஆரோக்கியமான போட்டியும் கூட்டாட்சியும்தான் ஒரு நாட்டின் பலம். நல்ல மாற்றத்திற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சில மாவட்டங்களின் வளர்ச்சி அளவுகோல்கள் மிக வலுவாக உள்ளன. அந்த மாவட்டங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், கற்ற பாடங்களைக் கொண்டு, பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். 

மனிதவளம் நம்மிடம் அதிகமாக உள்ளது. அதனால், சரியான திட்டமிடலுடன் அதிகாரிகள், பொதுமக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் சிறப்பாகக் கொண்டுசெல்ல முடியும். மேலும், அதிகாரிகளும் மக்களும் நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும்போது, அதன் முடிவு சிறந்ததாக இருக்கும்'' என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!