`ரூ.50 கோடிக்கு மேல் வங்கிக் கடன் பெற பாஸ்போர்ட் தகவல்கள் கட்டாயம்!’ - மத்திய அரசு அறிவிப்பு

'ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் வங்கிக் கடன் பெற, பாஸ்போர்ட் தகவல்களை அளிப்பது கட்டாயம்' என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 

பாஸ்போர்ட்

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற நினைப்பவர்கள், கட்டாயம் அவர்களது பஸ்போர்ட் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். அதேநேரம், ஏற்கெனவே 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களிடம், 45 நாள்களுக்குள் அவர்களது பாஸ்போர்ட் தகவல்களைப் பெற்றுவிடுமாறு வங்கிகளை நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,636 கோடி அளவுக்கு நிதி மோசடிசெய்த தொழிலதிபர் நீரவ் மோடி, வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதேபோல, கிங் ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு, இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கிறார். அவரை மீண்டும் இந்தியா கொண்டுவருவதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. இதனால், வங்கி மோசடிகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நிதியமைச்சகம் எடுத்துவருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!