வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (11/03/2018)

`பிரதமர் மோடி பரிந்துரைத்தும் வங்கியில் எனக்குக் கடன் கிட்டவில்லை!’ - கான்பூர் தச்சுத் தொழிலாளியின் சோகம்

பிரதமர் மோடி பரிந்துரை செய்தும், தனக்கு வங்கிக் கடன் கிட்டவில்லை என கான்பூரைச் சேர்ந்த தச்சர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சந்தீப் சோனி. தச்சரான இவர் பகவத் கீதையின் 706 ஸ்லோகங்களை மரத்தில் செதுக்கி, அதை பிரதமர் மோடிக்குப் பரிசளித்தார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அதை சோனி பரிசளித்தார். பின்னர், தச்சு வேலைகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க வங்கிக் கடன் வாங்க உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் அவர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வங்கிக் கடன் அளிக்க பரிந்துரை செய்தார். ஆனால், அவர் பரிந்துரை செய்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், வங்கியிலிருந்து தனக்குக் கடன் தொகை முழுமையாகக் கிடைக்கவில்லை என்கிறார் சந்தீப் சோனி. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ``ரூ.25 லட்சம் வங்கிக் கடன் கேட்டு நான் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், வங்கி தர்பபில் இருந்து ரூ.10 லட்சம் மட்டுமே எனக்குக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர், மீதமுள்ள தொகையைக் கேட்டு வங்கிக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தைக் கூறி வங்கி அதிகாரிகள் என்னை அலைக்கழிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.