நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மீதான விசாரணை தள்ளிப் போகிறதா?

கேரள நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை வரும் 14-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், நடிகர் திலீப் தாக்கல் செய்துள்ள மனு காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. 

நடிகர் திலீப்

கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கேரள நடிகை ஒருவர் ஷூட்டிங் முடித்து விட்டு திரிச்சூரில் இருந்து திருவனந்தபுரம் வந்துகொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். அந்த நடிகையைக் கடத்திய கும்பல் அவரை அடித்து உதத்ததுடன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது. அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டது. இந்தச் சம்பவம் கேரளாவை பரபரப்புக்கு உள்ளாக்கியது. 

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஷூட்டிங் ஸ்பாட்டில் டிரைவராக வேலை செய்தவரான பல்சர் சுனில் என்பவரைக் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான திலீப் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர் 8-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, சுமார் இரண்டு மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

நடிகையைக் கடத்தி தாக்குதலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் 300 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, செல்போன் உரையாடல் உள்ளிட்ட 400 ஆவணங்களை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு 14-ம் தேதி எர்ணாக்குளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் திலீப் சார்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த விசாரணைக்குத் தடை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக பல்சர் சுனிலின் செல்போனில் இருந்த மெமரி கார்டு உள்ளது. அதில் உள்ள வீடியோ காட்சிகள், படங்கள் ஆகியவற்றை நடிகர் திலீப் கேட்டிருந்தார். ஆனால், அவற்றைக் கொடுத்தால் நடிகைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். அந்தக் காட்சிகளை வெளியில் பரப்பி விடக்கூடும் என்கிற அச்சத்தில் அவற்றைக் கொடுக்க அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட் மறுத்து விட்டது. 

இந்த நிலையில், தனக்கு அந்த சாட்சியங்கள் மிகவும் அவசியமாக இருப்பதாகவும், அதனைப் பார்த்த பின்னரே அதில் உள்ள காட்சிகளைக் கொண்டு வழக்காட வாய்ப்பாக அமையும் என நடிகர் திலீப் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கின் ஆவணங்கள் கிடைப்பதற்கு முன்பாகவே விசாரணையைத் தொடங்க தடை விதிக்குமாறும் அவர் முறையிட்டு உள்ளர். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதால், நடிகை தாக்கப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு, திட்டமிட்டபடி 14-ம் தேதி விசாரணை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!