வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (12/03/2018)

கடைசி தொடர்பு:15:05 (12/03/2018)

மிரட்டிய விவசாயிகள் பேரணி! - பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பா.ஜ.க அரசு #FarmersMarch

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் விவசாயிகளின் பேரணியைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய ஆறு பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் செவ்வாய் கிழமையன்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து பாரதிய கிசான் சபா என்னும் விவசாய அமைப்பினர் நூறு பேர் திரண்டு மும்பை சட்டசபையை முற்றுகையிடும் பேரணியைத் தொடங்கினர். கடந்த ஒரு வாரப் பேரணிக்குப் பிறகு நூறில் தொடங்கிய விவசாயிகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி விவசாயிகள் அனைவரும் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் உள்ளனர். இவர்கள் சட்டசபையை நோக்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் விவசாயப் பொருள்களுக்குக் குறைந்த விலை நிர்ணயித்தல் போன்றவை இவர்களின் கோரிக்கைகளாக உள்ளன. சிறிய அளவில் தொடங்கிய இந்தப் பேரணி சற்றும் எதிர்பாராமல் இவ்வளவு பெரிய பேரணியாக மாறியதால், இது மகாராஷ்டிரா அரசுக்கு மிகவும் நெருக்கடியை அளித்துள்ளது.

அதனால் விவசாயிகளின் கோரிகைகள்குறித்து ஆலோசனை செய்ய ஆறு பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனை, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திரகாந்த் பட்டேல், விவசாயத்துறை அமைச்சர் பாண்டுரங் ஃபண்ட்கர், நீர்ப்பாசன அமைச்சர் கிரிஸ் மகராஜன், பழங்குடிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஷ்ணு சவாரா, மாநில கூட்டுறவு அமைச்சர் முபாஷ் தேஷ்முக், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டே ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விவசாயப்பேரணி

இந்தப் பேரணியில் 600 முதல் 700 பேர் மட்டுமே விவசாயிகள். மற்ற அனைவரும் பழங்குடி இன மக்கள் எனவும், அவர்களும் தங்களின் கோரிக்கைகளுக்காக விவசாயிகளுடன் இணைந்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது. மேலும், அரசின் ஆலோசனைக்குப்
பிறகு ,விவசாயிகளுக்குச் சாதகமான முடிவுகளே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.