வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (12/03/2018)

கடைசி தொடர்பு:15:47 (12/03/2018)

இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமா? - சர்ச்சையில் சி.பி.எஸ்.இ வினாத்தாள்

சி.பி.எஸ்.இ 6 ம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் சாதி பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாதி பற்றிய கேள்வி - சிபிஎஸ்இ வினாத்தாள்


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அண்மையில் தேர்வுகள் தொடங்கின. அதில் 6 ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வுத்தாளில், ’இந்துமத வர்ணாசிரமத்தின்படி மிகக்கீழான சாதி எது?’ என்னும் கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு பதில்களாக  ’1. பிராமணர்கள் 2.சூத்திரர்கள் 3.சத்திரியர்கள் 4.வானப்ரஸ்தர்கள்’ என்னும் நான்கு ஆப்ஷன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வினாத்தாளை புகைப்படம் எடுத்து பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

CBSE controversy

 

வழக்கறிஞர் சிவக்குமார்

 

இதுகுறித்து வழக்கறிஞர் சிவக்குமார் நம்மிடம் பேசுகையில், ”சி.பி.எஸ்.இ பாடத் திட்டம் என்பதே ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இயங்குவதாக ஒரு சந்தேகம் எழுகிறது. சி.பி.எஸ்.இ வரலாறு புத்தகங்களில் வர்ணாசிரமம் என்றால் என்ன? என்று விரிவாகக் கொடுத்துள்ளனர். மேலும், சாதிப் பிரிவுகளையும் தெளிவாக விளக்கியுள்ளனர். அனைத்தையும் சொல்லிவிட்டு கடைசியில் இவற்றை நாம் பின்பற்றக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். சாதி என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகளுக்கு எதற்காக சாதிப் பிரிவுகளைப் பற்றி விளக்க வேண்டும். அதிலும் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் மிகக்கீழான சாதி எது என்ற கேள்வி கொடுத்துள்ளது மிகவும் தவறு. வர்ணாசிரமம், சாதி அமைப்புமுறை உள்ளிட்டவை மறக்கடிக்கப்பட்டு வரும் சூழலில், குழந்தைகளின் மனதில் அவற்றை ஏன் விதைக்க வேண்டும்?” என்றார் ஆவேசத்துடன். 

 

இதே போன்று சி.பி.எஸ்.இ, கடந்த 2012ம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கியது. சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின்படி 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 168ஆம் பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட சாதி கொடுமைகளும், மோதல்கள் மற்றும் பெண்களின் உடைகள் என்ற தலைப்பில் நாடார் சமுதாய பெண்களை மிக இழிவாகவும், கொச்சைப்படுத்தும் விதமாக வந்த பாடப்பகுதியால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து, அப்போதைய  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாய பெண்கள் குறித்து இடம்பெற்றிருந்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தற்போது மீண்டுமொரு சர்ச்சை எழுந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க