வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (12/03/2018)

கடைசி தொடர்பு:15:50 (12/03/2018)

`180 கி.மீ நடைப்பயணமாக வந்த விவசாயிகள்!’ - உணவு வழங்கி நெகிழ்வித்த மும்பை டப்பாவாலாக்கள்

மும்பையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு பொதுமக்களுடன் இணைந்து டப்பாவாலாக்கள் உணவு அளித்து வருகின்றனர்.

விவசாயிகள் பேரணி


விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஸான் சாபா அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைப்பயணத்தைக் கடந்த வாரம் தொடங்கினர். சுமார் 180 கி.மீ தூரம் நடைப்பயணமாக அவர்கள் இன்று மும்பை வந்தடைந்தனர். மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள ஆசாத் மைதானத்தில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். மகாராஷ்ட்ரா சட்டசபையை முற்றுகையிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்வந்துள்ளார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், ஆசாத் மைதானத்தில் குழுமியுள்ள விவசாயிகளுக்கு உணவு வழங்க மும்பையின் பிரபலமான டப்பாவாலாக்கள் முன்வந்துள்ளனர். இதுகுறித்து பேசிய மும்பை டப்பாவாலாக்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுபாஷ் டலேகர், ``நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு உணவு வழங்குவதென நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்காக மும்பையின் மத்தியப் பகுதியில் உள்ள தாதர் பகுதியிலிருந்து கொலாபா (தெற்கு மும்பை) வரையில் உணவு சேகரிப்பதற்காக ஜி.பி.எஸ் வசதியுடன்கூடிய வாகனங்களை இயக்க உள்ளோம்’’ என்றார். டப்பாவாலாக்கள் அமைப்பின் ரொட்டி பேங்க் திட்டத்தின்கீழ் பொதுமக்கள், உணவகங்கள் உதவியுடன் விவசாயிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும், மும்பையில் பிரபலமான வடா-பாவ் உணவு வகைகளை அளிக்க முன்வந்துள்ளனர்.