வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (12/03/2018)

கடைசி தொடர்பு:16:45 (12/03/2018)

``நதிகளை இணைக்காதே...கடன்சுமை ஏற்றாதே!” கடலெனத் திரண்ட மக்கள் - கோரிக்கையை ஏற்குமா அரசு?

விவசாயிகள்  பேரணி

காராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் என சுமார் 30,000 மக்கள் ஒன்றுகூடுகிறார்கள். அங்கிருந்து மாநிலத்தின் தலைநகர் நோக்கி அந்த மக்கள் கூட்டம் நகரத் தொடங்குகிறது. நகர்ந்து வந்த அந்த கூட்டம், தாம் வந்த வழி நெடுகிலும், “நதிகளை இணைத்து நிலங்களை நாசப்படுத்தாதே!’ என்று கோஷம் எழுப்புகிறார்கள், ''வயிற்றுக்குச் சோறில்லை, வங்கிக் கடனுக்கு காசில்லை!” என்று ஆடிப்பாடி கொண்டாட்டமாகத் தங்களது கோரிக்கைகளைப் பதிவுசெய்தபடி வருகிறார்கள். ஆறு நாள்களுக்கு முன்பு தொடங்கிய அவர்களது நடைப்பயணம், இன்று மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் தற்போது முடிந்திருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு இது தேர்வுக்காலம் என்பதால், அவர்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக, இரவோடு இரவாக அத்தனைபேரும் மைதானத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் 30,000 பேராக இருந்த எண்ணிக்கை, வரும் வழியில் எல்லாம் ஆங்காங்கே மக்கள் இணைந்துகொண்டதை அடுத்து, தற்போது அந்தப் பேரணி மைதானத்தை அடைந்துவிட்ட நிலையில், சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளதாகப் பேரணியில் கலந்துகொண்டிருப்பவர்கள் கூறுகிறார்கள். எதற்காக இந்த திடீர் விவசாயிகள் பேரணி?

பேரணியில் கலந்துகொண்ட சோமைய்யாவின் கால்கள்தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவறிக்கைப்படி விவசாயிகள் தற்கொலையில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம், மகாராஷ்டிரா. 2009-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அங்கே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 23,000. அதாவது இது அரசின் விதிகளுக்கு உட்பட்டு விவசாயிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் நிகழ்ந்த தற்கொலை எண்ணிக்கை மட்டுமே. இந்த எண்ணிக்கையில் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் போன்றோர் அடக்கமில்லை.  அவர்களையும் சேர்க்கும் நிலையில் இந்தத் தற்கொலை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். 

ஆசாத் மைதானம் தற்போது...


வறட்சியின் விளிம்பில் விவசாய நிலங்கள் ஒருபுறம் இருக்க, மாநிலத்தின் தண்ணீர் சிக்கலுக்கான தீர்வு காண்பதற்கு நதிநீர் இணைக்கும் திட்டத்தின் கீழ்  நாசிக்கின் இரண்டு முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கான வரைவை தேசிய நீர் மேம்பாட்டு ஆணையத்திடம் சென்ற ஆண்டு ஜூன் மாதம் கேட்டிருந்தது.  ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாசிக், தானே மற்றும் பால்காரைச் சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்படும். வறட்சியும், கடன் சிக்கலும் ,தற்கொலையும் மகாராஷ்டிர மாநிலத்து மக்களின் நீண்ட நாள் பிரச்னையாக இருந்துவரும் சூழலில் இந்த நதிநீர் இணைப்புத்திட்டம் மாநிலத்தின் மொத்த விவசாயிகளையும் வாழ்வாதாரமில்லாமல் அழித்துவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வே இந்தப் பெரும் பேரணியின் பின்னனி. 
மைதானத்தை அடைந்துள்ள மக்கள் மகாராஷ்டிரா சட்டசபையை முற்றுகையிடப்போவதாக திட்டம் இருந்துவந்த நிலையில் தற்போது அரசு தரப்பு இவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது.

 

விஜூஇந்தப் பேரணியை அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் (AIKS)  என்கிற அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. நாசிக் தொடங்கி மும்பை வரையிலான 180 கிமீ தூரம் முழுக்க மக்கள் நடந்தே வந்திருக்கிறார்கள். ஆனால், எதற்காக இவ்வளவு தூரம் நடந்தே வரவேண்டும்...?. பேரணியில் கலந்துகொண்டிருக்கும் சங்கத்தின் விஜூ கிருஷ்ணன் என்பவர் கூறுகையில்..”நடை பேரணியும் ஒருவகையிலான எதிர்ப்புதான். மேலும் நாசிக்கில் தொடங்கும்போது வெறும் 30000 பேராக மட்டுமே இருந்த நாங்கள் நாசிக் மும்பை தேசிய நெடுங்சாலையில் வரும்போது இன்னும் பெரும்பாலானவர்கள் எங்களுடன் இணைந்துகொண்டார்கள்.தற்போது 1 லட்சம் மக்களுக்கு மேல் இருப்பதாக மீடியா தரப்பு கூறுகிறது. ஒருவேளை நாங்கள் வாகனத்தில் வந்திருந்தால் எங்கள் கோரிக்கைக்கு இணைந்து குரல்கொடுக்கும் இத்தனை மக்களை நாங்கள் சந்தித்திருக்க மாட்டோம். மேலும் விவசாயிகளுக்கு இயல்பிலேயே உடல்வலிமை அதிகம் என்பதால் இத்தனை தூரம் நடந்து வருவது கடினமாக இல்லை. ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளும் முப்பது கிலோமீட்டர் தூரம் பயணித்துச் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்குவோம். வழியெங்கிலும் மக்கள் எங்களுக்கு உணவும் நீரும் கொடுத்தார்கள். தற்போது எங்களது எண்ணிக்கையப் பார்த்துதான் அரசுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது.நேரடியாக நாங்கள் இங்கே வந்திருந்தால் எங்களை ஊருக்குள் அனுமதித்துக் கூட இருக்கமாட்டார்கள்” என்றார்.

இவர்களின் கோரிக்கை வெற்றி பெறுமா? இல்லையா? என்கிற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், ஜந்தர் மந்தரில் நூறு நாட்களுக்கும் மேல் எத்தனையோ விதமாக மத்திய அரசுக்கு எதிராகத் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அவர்களுக்காக அரசு துளியும் செவிசாய்க்காததை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியதாக இருக்கிறது. பாதுக்காப்பான உணவுக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்து இதுபற்றிக் கூறுகையில், “சிவப்பு தொப்பி அணிந்து கம்யூனிச அடையாளத்தின் கீழ் இந்த போராட்டம் நடந்தாலும் எவ்வித அரசியல் இடையூறுகளும் இல்லாததால் பேரணி இந்தளவிற்கு முன்னேறியுள்ளது. நமது தமிழக விவசாயிகள் போராட்டத்தில் மறைமுக இடையூறுகள் நிறையவே இருந்தன. மேலும், விவசாயக் கடன் தள்ளுபடி என்றில்லாமல் விவசாயக் கடனே இல்லாத நிலை என்பதற்காக அவர்களது குரல் ஒலிக்கவேண்டும். அப்படி கோரிக்கைவைத்தால் மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வை எட்டமுடியும். இல்லையென்றால் ஒவ்வொருவருடமும் விவசாயக் கடன் தள்ளுபடிக்காக இத்தனைப் பேரைத் திரட்டிக் குரல்கொடுப்பதென்பது சாத்தியமற்றது. மேலும் தள்ளுபடிக்கான கோரிக்கை மட்டுமெ வைக்கப்பட்டுவருகிறது அதற்கான தீர்வு இன்னும் எட்டப்படாமலேயே இருக்கிறது. கார்ப்பரேட் கடன்களை விரைந்து தள்ளுபடி செய்யும் அரசு வங்கிகள் விவசாயக் கடன் சிக்கலிலும் அதே வேகத்தில் செயல்படவேண்டும்” என்றார். 

வயிற்றுக்குச் சோறிடுபவர்களின் குரல் வெல்லட்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்