வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (12/03/2018)

கடைசி தொடர்பு:20:14 (12/03/2018)

கருணைக் கொலை தீர்ப்புக்குப் பின்னணியிலும் ஒரு பாலியல் வன்கொடுமைச் சம்பவம்! #ArunaShanbaug

மும்பை கெம் மருத்துவமனையில் பணி முடித்த அருணா, தன் அறைக்குச் சென்று உடைகளை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த வார்டுபாய் சோகன்லால், திடீரென அருணா மீது பாய்ந்து நாய் சங்கிலியால் அவரின் கழுத்தை இறுக்கினார். அவரால் கத்த முடியவில்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அருணா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கழுத்தில் சுற்றப்பட்ட சங்கிலி, அருணாவின் மூச்சுக்குழாயைத் துண்டித்தது. அருணாவின் துரதிர்ஷ்டம்... அந்த அறை பக்கமே யாரும் வராததுதான். அடுத்த நாள் காலை ரத்த வெள்ளத்தில் கிடந்த அருணாவைப் பார்த்து, செவிலியர்கள் போட்ட கூச்சலில் கெம் மருந்துவமனையே அதிர்ந்தது. 

கருணைக் கொலை அனுமதிக்கு காரணமான அருணா

மூச்சுக்குழாய் துண்டானதால் 8 மணி நேரமாக அருணாவின் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லவில்லை. அருணாவோ கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். அருணாவைப் பராமரிக்க, கெம் மருத்துவமனை நிர்வாகம் தனி அறை ஒதுக்கியது. அருணா சுயநினைவின்றி இருந்தாலும், கெம் மருத்துவமனை டாக்டர்களும் நர்சுகளும்அவரை குழந்தைபோல பார்த்துக்கொண்டனர். இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், அருணா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததுதான்.

அருணாவின் சின்சியரான பணி பிடித்துப்போய், அதே மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் அருணாவை நேசித்தார். அருணாவுக்கும் அவர் மீது காதல். இரு வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டதால், இருவருமே திருமணக் கனவில் மூழ்கியிருந்தனர். நிச்சயிக்கப்பட்டிருந்த டாக்டர், அருணாவின் நிலையைப் பார்த்து வயிற்றிலும்  மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதார்.  44 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம், `நிர்பயா' சம்பவத்தை நமக்கு மீண்டும் நினைவுபடுத்தியது.

1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. அருணாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய வார்டுபாய் சோகன்லாலுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ஹல்திபூரைச் சேர்ந்த அருணா, 10 வயதிலேயே தந்தையை இழந்தவர். பிறகு, கஷ்டப்பட்டு படித்து நர்ஸ் ஆகி, திருமண பந்தத்துக்குள் நுழைய இருந்த சமயத்தில்தான் சோகன்லால் என்பவரால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். 

2009-ம் ஆண்டு பிங்கி விரானி என்கிற பத்திரிகையாளர்,  அருணாவை கருணைக் கொலை செய்யவேண்டி, உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். பிங்கி விரானி தன் மனுவில், `பாலியல் வன்கொடுமை நடந்த அன்றே அருணா இறந்துவிட்டார். எனவே, அவருக்கு நீராகாரம் அளிப்பதை நிறுத்தி இறக்கச் செய்யலாம்' என்று கூறியிருந்தார். உச்ச நீதிமன்றம், பிங்கி மனுவை நிராகரித்துவிட்டது. அதே வேளையில், `பாதிக்கப்பட்டவருக்கு அதுவரை அளித்துவந்த சிகிச்சைகளை நிறுத்தி, அவர்களை இறக்கச்செய்யும்  `பேசிவ் எத்னேஸியா' முறைக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்' என்று அருணா வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. சுமார் 42 ஆண்டுகாலம் கோமாவிலேயே இருந்த அருணா, 2015-ம் ஆண்டு மே 15-ம் தேதி 68 வது வயதில் தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். இத்தனை ஆண்டுகாலமும் கெம் மருத்துவமனையே அவரைப் பராமரித்துவந்தது.

கருணைக் கொலை அனுமதிக்கு காரணமான அருணா

உலகில் பல நாடுகளில் கருணைக் கொலைக்கு அனுமதியுள்ளது. இந்தியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப்பட அருணாவின் வழக்கும் முக்கியமான ஒன்று. `எத்னேசியா' என்பது கிரேக்க வார்த்தை. இதற்கு `நல்ல இறப்பு' என்று தமிழில் அர்த்தம். யாருமே மோசமான நோயால் பாதிக்கப்பட்டு அழுகிச் சாவதை விரும்ப மாட்டோம். சாவு என்று வந்துவிட்டால் சட்டென செத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் எல்லோருக்குள்ளும் இருக்கும். எத்தகைய சிகிச்சையளித்தாலும் நோயாளியைக் காப்பற்ற முடியாது என்ற சூழலில், தக்க சான்றுகளுடன் மனிதர்கள் கௌரவமாக உயிரிழக்க வழிவகை செய்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்