சிறார்களை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைகளுக்கு சிறை..! ஹைதராபாத் காவல்துறை அதிரடி

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தைகள் 69 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சிறார்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தடுப்பதற்காக, ஹைதராபாத் காவல்துறையினர் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத் காவல்துறையினர், இரு சக்கர வாகனங்களை ஓட்டிய சிறார்களின் பெற்றோர்களைக் கைதுசெய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று நாள்கள் வரை சிறைத் தண்டனை அளித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் ரங்கநாத் நிருபர்களிடம், 'நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், 14-16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக், கார்களை ஓட்டுநர்  உரிமம் இல்லாமல் ஓட்டி, விபத்துக்குள்ளாகிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 5 சிறுவர்கள் விபத்துக்குள்ளாகி இறந்தனர்.

அதன்பிறகு, சிறுவர்களை இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதித்த பெற்றோர்களைத் தண்டித்தால் விபத்துக்கள் குறையும் என திட்டமிட்டோம். இதையடுத்து, சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த 69 பெற்றோர்களுக்கு அபராதம் ஏதும் அளிக்காமல், மோட்டார் வாகனச் சட்டத்தின் 181 பிரிவின்கீழ் (உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் )என நீதிபதி இவர்களுக்கு 1நாள் முதல் 3 நாள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தனர். 

 கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 69 சிறுவர்களின் தந்தையர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேர் சிறார் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர் . எங்களின் இந்த நடவடிக்கைக்கு, பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோரைக் கைதுசெய்வதைப் பார்க்கும்போது, பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை எடுக்க அஞ்சுகிறார்கள். இதனால், கடந்த ஒரு மாதமாக விபத்துக்கள் குறைந்துள்ளது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!