வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (13/03/2018)

கடைசி தொடர்பு:11:10 (13/03/2018)

பல கோடிகள் சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர் கைது! - பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் டிராவிட், சாய்னா நேவால்

கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் முன்னாள் பேட்மின்டன் நட்சத்திரமான பிரகாஷ் படுகோன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள், போலி நிதி நிறுவனத்தில் முதலீடுசெய்து ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. 

டிராவிட்

இதுகுறித்து நியூஸ் 18 வெளியிட்ட செய்தியில், 

’பெங்களூரைச் சேர்ந்த நிதி நிறுவனம், 'விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்'. இந்த நிதி நிறுவனத்தில், இந்திய விளையாட்டு வீரர்கள் ராகுல் டிராவிட், சாய்னா நேவால், பிரகாஷ் படுகோன் உட்பட, கலை, சினிமா, வர்த்தகம், அரசியல் போன்ற துறைகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகள் முதலீடுசெய்து ஏமாந்துள்ளனர். 

இந்தப் போலி நிறுவனத்தின் உரிமையாளர், ராகவேந்திரா ஸ்ரீநாத் மற்றும் அவரின் ஏஜென்டுகள் சுத்ராம் சுரேஷ், நரசிம்ம மூர்த்தி, நாகராஜ், பிரகலாத் ஆகியோரை, பெங்களூர் போலீஸார் கைதுசெய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சுத்ராம் சுரேஷ் என்பவர் விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர் என்பதும், இந்நிறுவனத்தில் விளையாட்டு வீரர்கள் முதலீடு செய்ததற்கு இவர்தான் முக்கியக் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும், முதலீடு செய்தவர்களிடம் சுமார் ரூ.300 கோடி ஏமாற்றி மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்தில் சிக்கிய அனைவரையும் 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.