ஓடும் காரில் பாலியல் தொல்லை! உபர் கேப் புக்செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! | uber driver sexually harassed a woman who booked cab

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (13/03/2018)

கடைசி தொடர்பு:16:41 (13/03/2018)

ஓடும் காரில் பாலியல் தொல்லை! உபர் கேப் புக்செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

இந்தியாவில் வாடகைக் கார் சேவைகளை வழங்கி வரும் உபர் கேப் சேவையைப் பயன்படுத்தி, கேப் புக்செய்து பயணம் செய்த பெண்ணிடம் அதன் ஓட்டுநர் தவறாக நடக்க முயன்றுள்ளார். 

Uber driver

 

டெல்லியைச் சேர்ந்தவர் ரோகிணி (29). இவர், பிரபல எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அன்று, ஹரியானாவில் உள்ள குண்டலி எனும் இடத்திலிருந்து தனது குடியிருப்பு பகுதிக்குச் செல்ல உபர் கேப் ஒன்றைப் புக் செய்துள்ளார். புக் செய்த சில நிமிடத்தில் கேப் வரவே, இயல்பாக அவர் ஏறிப் பயணம் செய்துள்ளார். சரியானப் பாதையை நோக்கி ஓட்டிச் சென்ற ஓட்டுநர், சிறிது தூரம் சென்ற பிறகு, மற்றொரு வழியைத் தேர்வு செய்து காரை ஓட்டிச் சென்றுள்ளார். இதைக் கவனித்த ரோகிணி, ஓட்டுநரிடம் தவறான வழியில் செல்கிறீர்கள் என்று கூறியுள்ளார். 

அவர் சொல்வதைச் செவி கொடுத்து கேட்காமல், அந்த நபர், காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சிக்னல் ஒன்றைக் கடந்து செல்வதற்கு கார் நின்றது. அதனால், தப்பிக்க முயன்ற ரோகிணி காரை திறக்கப் போராடியுள்ளார். அதன்பின், சிக்னல் கிடைக்கவே, கார் மீண்டும் வேகம் பிடித்தது. காரை ஓட்டிச் சென்றவாறே ரோகிணியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்  ஓட்டுநர். பிறகு, சி.ஜி.ஜி. எனும் நிலையத்தைக் கடக்கும்போது காரின் வேகம் குறைந்துள்ளது. 

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ரோகிணி காரின் கதவைத் திறந்து குதித்து தப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்குப்பின், அந்த ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர், ஹரியானா மாநிலத்தில் உள்ள கன்னூர் என்ற பகுதியில் வசித்து வரும் சஞ்சீவ் (22) என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனத்தின் ஓட்டுநராகப் பதிவு செய்யாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.