வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (13/03/2018)

கடைசி தொடர்பு:13:45 (13/03/2018)

சேமிப்புக்கணக்கு வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ திடீர் சலுகை!

25 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ), தனது வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத்தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாகக் குறைத்துள்ளது. 

எஸ்.பி.ஐ

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகச் செயல்பட்டுவருகிறது, பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகையாக (மினிமம் பேலன்ஸ்) ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் எனப் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பாகவும் அமைந்தது.

மேலும், பல தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என எஸ்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், குறைந்த பட்ச இருப்புத்தொகை பராமரிக்காத வங்கிக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்துள்ளது. நகர்ப் பகுதியில், குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் ரூ. 50 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, ரூ.15 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடுத்தர நகர வங்கி மற்றும் புறநகர் வங்கிகளின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காவிட்டால், ரூ.12 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.