``வரிக்குத் தென்மாநிலங்கள்.. வளர்ச்சித் திட்டங்களுக்கு வடமாநிலங்களா?’’ - மத்திய அரசை விளாசும் சந்திரபாபு நாயுடு

தென்மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரி வருவாய் வட மாநிலங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். 

சந்திரபாபு நாயுடு

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்குதேசம் கட்சி, ஆந்திர மாநிலத்துக்கு அளிக்கப்பட வேண்டிய சிறப்பு அந்தஸ்த்தை அளிக்கக் கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால், பா.ஜ.க தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது. இந்தநிலையில், ஆந்திர சட்டப்பேரவையில் மத்திய அரசை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அவர், ``மத்திய அரசின் பணம் அல்லது மாநில அரசின் பணம் என எதுவும் இல்லை. எல்லாமே மக்கள் பணம்தான். தென் மாநிலங்களே மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிக்கின்றன. ஆனால், மத்திய அரசோ, அந்தப் பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறது. ஆந்திராவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துவது ஏன்?. ஆந்திர மாநிலம் நாட்டின் ஒரு பகுதி இல்லையா?. ஜி.எஸ்.டி. வரி விகிதம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளிக்கும் இழப்பீட்டுத் தொகை வடகிழக்கு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. மக்களின் உணர்வுகளை வைத்து மட்டுமே ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும்போது, ஏன் அதை வைத்து சிறப்பு அந்தஸ்து கொடுக்க முடியாது?’’ என்று அவர் கேள்வியெழுப்பினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!