வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (13/03/2018)

கடைசி தொடர்பு:23:30 (13/03/2018)

`எதிர்கட்சியினருக்கு டெல்லியில் சோனியா காந்தி இரவு விருந்து!’ - கனிமொழி உள்பட 20 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

எதிர்கட்சியினருக்கு டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அளித்த இரவு விருந்தில் தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்பட 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். 


வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் கலந்துகொள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினுக்கும் சோனியா அழைப்பு விடுத்திருந்தார். 

இந்த விருந்தில், தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதிக் கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ், திரிணாமுல்  காங்கிரஸ் சார்பில் சுதீப் பந்தோயபத்யாய், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் மற்றும்  மிசா பார்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஹேமந்த் சோரன், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். மேலும், இந்த விருந்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியும்  கலந்துகொண்டார். 

இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அஹமத் படேல், ஏ.கே.ஆண்டனி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர். 2019-ம் ஆண்டு தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த விருந்து அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டாலும், இதை தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.