வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (14/03/2018)

கடைசி தொடர்பு:15:27 (14/03/2018)

உ.பி. இடைத்தேர்தலில் பா.ஜ.க-வின் எம்.பி தொகுதியைக் கைப்பற்றுகிறது சமாஜ்வாதி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், இரு தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று துவங்கி நடைபெற்றுவருகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க எம்.பி-யாக இருந்த யோகி ஆதித்யநாத், கடந்த ஆண்டு அம்மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவரின் எம்.பி பதவியை ராஜிநாமா செய்தார். அதேபோல, புல்பூர் தொகுதியின் எம்.பி-யாக இருந்த கேசவ் பிரசாத் மௌர்யா, துணை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், இவரும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இருவரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. கோரக்பூர் தொகுதியில் கடந்த 5 முறையாக யோகி ஆதித்யநாத் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறார். பா.ஜ.க-வின் பரம எதிர்க்கட்சிகளாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதியும் இணைந்துள்ளதால், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கோரக்பூர் தொகுதியில் 10  வேட்பாளர்களும், புல்பூர் தொகுதியில் 22 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோரக்பூர் தொகுயில் பா.ஜ.க-வும், புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதியும் முன்னணியில் உள்ளன. புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி 12,231 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.