மகன் திருமணம், மகளின் படிப்பு, மகனின் எடை குறைப்பு..! நீதா அம்பானி பெர்சனல்

"குண்டாக இருப்பது பிள்ளைகளுக்கு எந்த அளவுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துமோ, அதே அளவுக்கு மனஉளைச்சலை அம்மாவுக்கும் ஏற்படுத்தும்" என்கிறார் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. 

அம்பானி குடும்பம்

அண்மையில் நடந்த பத்திரிகை ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி மனைவியும் ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் அமைப்பின் தலைவருமான நீதா அம்பானி, இந்தத் தகவலைச் சொன்னவர், "இளைய மகன் ஆனந்த், 108 கிலோ உடல் எடையைக் குறைத்திருப்பதால், குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்" என்று நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார். 

”மகள் என்ன செய்துவருகிறார்?''

”மகள் ஈஷா, யேல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, தற்போது எம்.பி.ஏ படிப்பை ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார். ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியாற்ற விரும்புகிறாள்" என்றார் நீதா அம்பானி. 

முதல் மகன் ஆகாஷ் திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த நீதா அம்பானி, ``நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு, அவர்களுடைய வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய மகன் யாரைத் தேர்ந்தெடுத்து `இவர்தான் என்னுடைய வாழ்க்கை துணை' என்று சொன்னாலும். அவர்களை நானும் முகேஷ் அம்பானியும் மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்தவே செய்வோம்" என்று சொல்லி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். 

``இளைய மகன் ஆனந்த், உடல் எடையைக் குறைத்து பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறாரே?'' என்ற கேட்டதற்கு, ``உடல் எடையைக் குறைத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறான் ஆனந்த். இளம் வயதில் மிகவும் குண்டாக இருந்ததால், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால், நானும் அவனும் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகினோம். இதனால் ஆனந்தை நிறைய சிறுவர்களும் இளைஞர்களும் கேலிகிண்டல் செய்தனர். கூடவே, ஆனந்த் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, கிண்டல் செய்தவர்களும் உண்டு. இதனால், வெளியில் வரவே தயக்கம் காட்டிவந்தான். 

அம்பானி குடும்பம்

ஐ.பி.எல் போட்டியில் முதல்முறையாக மும்பை இண்டியன்ஸ் டீம் வெற்றி பெற்றபோது, கோப்பையை வாங்கும்போது ஆனந்தை பங்குபெற கஷ்டப்பட்டுத்தான் அனுப்பிவைத்தேன். அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி, ஆனந்த் குறித்து மீம்ஸ்கள் அதிகளவில் வெளிவந்தன. இது எங்கள் இருவரையும் கடுமையாகப் பாதித்தது. 

ஆனந்த், உடல் எடை பிரச்னையிலிருந்து வெளியே வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, உடல் எடையைக் குறைக்கக் கடுமையாகப் பயிற்சி செய்தான். தன்னுடைய உடல் எடையைக் குறைக்க என்னிடம் உதவி கேட்டான். கலங்கிவிட்டேன். ஜாம் நகரில் 500 நாள்கள் தங்கி தினமும் 23 கிலோமீட்டர் தூரம் நடந்தும், கடுமையான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தும், 108 கிலோ எடையைக் குறைத்திருக்கிறான். இதன் மூலம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறான். தற்போது, 27 அடுக்குமாடி வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம்" என்றார் நீதா அம்பானி. 

பணம் படைத்தவர்கள் உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்; பணம் இல்லாதவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக நாளும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!