`தமிழகத்தைப்போல் ஆந்திராவிலும் அரங்கேற்றப் பார்க்கிறார் மோடி!' - உஷார்படுத்தும் சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் நடத்தும் நாடகம்போல் ஆந்திராவில் நடத்த பிரதமர் மோடி முயற்சி செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு
 

2018-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டைக் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது. விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட் இருப்பதாகப் பா.ஜ.க தெரிவித்தாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்மீது அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாகப் பா.ஜ.க-வின் முக்கிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம், மத்திய பட்ஜெட்மீது கடும் அதிருப்தி தெரிவித்தது. ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால்,  பட்ஜெட்மீது அக்கட்சி அதிருப்தி தெரிவித்தது. அதன் விளைவாக சமீபத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவதாகத் தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்தச் சூழலில் ஜனசேனா கட்சியின் 4 வது ஆண்டுவிழாவில் பேசிய அக்கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், `சந்திரபாபு நாயுடு மகன்மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும் ஊழல் அதிகரித்துவிட்டது. தந்தையும் மகனும் கோடிக்கணக்கில் ஊழல் செய்கிறார்கள்’ என்று குற்றம்சாட்டி பரபரப்பைக் கிளப்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சந்திரபாபு நாயுடு தன் கட்சியின் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் வீடியோ கான்ஃபெரன்ஸிங்கில் கலந்துரையாடினார். அதில் அவர் பேசுகையில், ''பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் முயற்சி செய்கிறார். ஆந்திராவுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைதான் நாம் கேட்கிறோம். ஆனால், நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணை ஆந்திர அரசுக்கு எதிராகத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலைவீசுகிறது. இதற்கு சமீபத்தில் நடந்த உ.பி, பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தது சிறந்த எடுத்துக்காட்டு’ என்று விமர்சித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!