6 நாள்கள், 180 கி.மீ, 35,000 பேர்... விவசாயிகள் படையைத் திரட்டிய தனி ஒருவன்! | Vijoo Krishnan, Man Who Inspired 50,000 Farmers to March 180-km

வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (16/03/2018)

கடைசி தொடர்பு:10:55 (16/03/2018)

6 நாள்கள், 180 கி.மீ, 35,000 பேர்... விவசாயிகள் படையைத் திரட்டிய தனி ஒருவன்!

ந்து வருடங்களுக்கு முன், மும்பை ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் திரண்டனர். அணைகளில் கூடுதல் நீர் திறந்து விட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. அப்போது, மகாராஷ்ட்ரத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு. துணை முதலமைச்சராக இருந்த அஜித்பவார், `நான் வேண்டுமானால் அணையில் சிறுநீர் கழிக்கட்டுமா... நீர்மட்டம் உயருகிறதா எனப் பார்க்கலாம்?' என்று எகத்தாளமாகப் பேசினார். அடுத்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. விவசாயிகளை எகத்தாளமாகப் பேசினால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி வாங்கிய அடியே சாட்சி!

விஜு கிருஷ்ணன்.மீண்டும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை, தற்போதைய பாரதிய ஜனதா அரசும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விவசாயிகள், பொங்கி எழுந்தனர். தலைநகரை முற்றுகையிட முடிவுசெய்தனர். நாசிக், மும்பையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள நகரம். மகாராஷ்டிராவில் மரத்வாடா பகுதிக்கு அடுத்ததாக, விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் பகுதி அது. 

நாசிக்கில் இருந்து நடந்தே சென்று மும்பை நகரை முற்றுகையிடுவது என்பது விவசாயிகளின் திட்டம். பிய்ந்துபோன செருப்புகளை அணிந்துகொண்டு தேயத் தேய நாள் ஒன்றுக்கு 35 கிலோமீட்டர் வீதம் ஆறு நாள்கள் தொடர்ந்து நடந்தனர். ஆங்காங்கே சமையல் செய்து உண்டனர், உறங்கினர். மும்பையை நெருங்குகையில்  65 வயது பாட்டியின் கால்கள் கடும் வெயிலில் உரிந்துபோனது. இருப்பினும், நடைப்பயணத்திலிருந்து அவர் பின்வாங்கவில்லை. ரத்தம் தோய்ந்த கால்களுடனே அவர் மும்பை நோக்கி நடந்தார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது. கால்களுக்கு சிகிச்சையளித்தவர்களிடம், `நான் என் ஊருக்கு வெறுங்கையுடன் போவதற்குப் பதிலாக நடைப்பயணத்திலேயே செத்துவிடலாம். அங்கே சென்றாலும் பட்டினியால் செத்துவிடுவேன்' என்றபோது மருத்துவர்கள், செவிலியர் கண்களிலும் நீர் திரண்டது. 

விவசாயிகள் மும்பையை நெருங்க... நெருங்க, `என்ன ஆகுமோ... ஏது ஆகுமோ!' என்று மகாராஷ்டிரா அரசுக்குப் பதற்றம் இரட்டிப்பானது. பேரிடர் ஏற்பட்டால் அரசுத் துறைகளைத் தூண்டிவிடுவது போன்று, அனைத்து துறைகளையும் அரசு முடுக்கியது. விவசாயிகள் பேரணியோ, கட்டுக்கோப்பான ராணுவப்படை போல மும்பையை நெருங்கியது. மும்பைக்குள் பகல் நேரத்தில் நுழைந்தால், நகரில் போக்குவரத்து பாதிக்கப்படும்; தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்த விவசாயிகள், நள்ளிரவில் ஆசாத் மைதானம் நோக்கி நடந்தார்கள். மும்பையும் மதுரையைப் போன்றே உறங்காநகரம்தான்.  35 ஆயிரம் பேர்கொண்ட கூட்டம் சிவப்புக் கொடியுடன் ஆசாத் மைதானம் நோக்கி நகர்ந்துச் சென்றதை, நள்ளிரவில் வீட்டு ஜன்னல்களிலிருந்து மும்பை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். விவசாயிகள் நள்ளிரவில் நடைப்பயணம் மேற்கொண்ட புகைப்படமும் இணைத்தில் வைரலானது. 

விவசாயிகள்

pic: AP

முந்தையை காங்கிரஸ் அரசைப்போலவே பாரதிய ஜனதா அரசும் விவசாயிகளின் நடைப்பயணத்தைக் கொச்சைப்படுத்தத் தவறவில்லை. பாரதிய ஜனதா கட்சி எம்.பி பூனம் மகாஜன், `சிவப்புக் கொடியுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் இவர்கள், நகர்ப்புற மாவோயிஸ்ட்டுகளால் ஈர்க்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்' என்று குற்றம்சாட்டினார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், `பேராடுகிறவர்கள், விவசாயிகளே அல்ல; பழங்குடியினர்' என்றார். இத்தகைய விமர்சனங்கள் மும்பை மக்களிடம் எடுபடவில்லை. 

மும்பை வந்த விவசாயிகளை, மக்கள் பரிவுடன் நடத்தினர். உணவு, குடிநீர், காலணிகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் சேகரித்து வழங்கினர். இப்போதும் அதே ஆசாத் மைதானத்தில்தான் விவசாயிகள் திரண்டிருந்தனர். அடுத்து,  `மந்த்ராலயா' என அழைக்கப்படும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தை முற்றுகையிடுவது விவசாயிகளின் திட்டம். விழித்துக்கொண்ட பட்னாவீஸ் அரசு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வழங்கியது. நாசிக் திரும்புகையில், விவசாயிகளுக்காக காய்கறி சுமந்து, அவர்களுடன் வந்த ட்ரக் ஒன்றை உணவுப் பொருள்களால் நிரப்பி அனுப்பினர் மும்பை மக்கள். மார்ச் 12-ம் தேதி, விவசாயிகள் வெற்றிப் பெருமிதத்துடன் ஊர் திரும்பினர்.  

கிட்டத்தட்ட ஆறு நாள்கள் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற நடைப்பயணத்தை, எந்தவிதமான அசம்பாவிதமும்  இல்லாமல் நடத்தினார் அகில இந்திய கிஷான் சங்கத்தின் துணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன். கம்யூனிசம் பாய்ந்த கேரளத்தின் கண்ணூர்தான் இவருக்கு பூர்வீகம். படிக்கும்போதே போராட்டக்களத்தில் குதித்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவச் சங்கத் தலைவராக இருந்தார். `மாறிவரும் இந்திய விவசாயப் பொருளாதாரம்' என்கிற தலைப்பில் ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, பெங்களூரு புனித ஜோசப் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவுத் துறைத் தலைவராக இரு ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது இயக்கத்தில் முழு நேரமாக ஐக்கிமாகிவிட்டார். விவசாயிகளின் மும்பை நோக்கிய பயணத்தை, ஒரு சவாலாகவே ஏற்று விஜு நடத்திக்காட்டினார். 

``பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுமே பாரபட்சமில்லாமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கின்றன. பாரதிய ஜனதா ஆட்சியின் தவறான கொள்கைகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பறித்துள்ளன. விவசாயிகள், நமக்கு சோறு போட்ட நிலை மாறிவிட்டது. முதலில் அவர்களின் வயிற்றை நிரப்புவதற்கு நாம்  கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார் விஜு கிருஷ்ணன்.

இவரின் கூற்று உண்மைதானே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்