பணிச்சுமை, விடுமுறை மறுப்பு.. அழுத்தத்தில் தமிழக காவல்துறை! #VikatanInfographics

காவல்துறை என்றதுமே கொஞ்சம் முரட்டுத்தனமான ஆட்கள், பேச்சே கடுமையாக இருக்கும், விஜயகாந்த் படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரங்கள்தான் மனதில் வந்து போகும். ஆனால், இவ்வளவு வலிமையான மனிதர்களுக்கும் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகவே உள்ளது. காவலர் தற்கொலை என்பது சமீபத்தில் தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாக மாறிவருகிறது. 

சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருண் ராஜ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சதீஷ் காவல் நிலைய வளாகத்தில்  துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக்கரணையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணிச்சுமை காரணமாக வேலையை விட்டு விலகுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

போலீஸ்

இதேபோல், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் அமுதசெல்வி. 2011-ம் ஆண்டு மைலாப்பூர் இன்ஸ்பெக்டர், திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா என்று காவலர்கள் பலர், பல்வேறு வருடங்களாகவே தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் 166 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேபோல், மகாராஷ்டிராவில் 161 காவலர்களும், கேரளாவில் 61 காவலர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்றப்பதிவுத் துறை ஆவணத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இப்படித் தொடர்ச்சியாக காவல்துறையினர் செய்துகொள்ளும் தற்கொலைக்குக் காரணம் பணிச்சுமை, குடும்பச் சூழ்நிலை, மேலதிகாரிகள் அழுத்தம், மன அழுத்தம், நோய் என்று அடுக்கடுக்காக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

போலீஸ்

ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள், நீதிமன்ற பணிகள், முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் என்று பல்வேறு வகையில் சுழற்சி  முறையில் பணிபுரிகின்றனர். சுழற்சி முறையில் பணிபுரிந்தாலும் சில நேரங்களில் தொடர்ச்சியான பணிகள், விடுமுறை மறுப்பு, மேலதிகாரிகளின் நெருக்கத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாகப் பெண்காவலர்கள் பலர், கடும் பணிச்சுமை, ஓய்வின்மை, குடும்பத்தினருடன் சரியாக நேரம் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். இவர்களின் பணி நேரம் ஒழுங்கற்றதாக இருப்பதால் சரியான நேரத்தில் உணவருந்த முடிவதில்லை. அதேபோல், பாதுகாப்பிற்காகப் பலர் வெளியிடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாற்றம், உணவுப் பழக்க மாற்றம் என்று பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். 

இதுபோன்றவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாத பல்வேறு காவலர்கள் தற்கொலையை மேற்கொள்கின்றனர். இதுபோன்று நடைபெறும் விபரீத சம்பவங்களை நிரந்தரமாக நிறுத்துவதற்காகத் தமிழக அரசின் சார்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைக் காவல் துறையில் கொண்டுவர வேண்டும் என்று காவலர்களிடையே தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் குறைகளைத் தெரிவிக்க நடத்தப்படும் காவலர்கள் குறை தீர்ப்பு முகாமைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றாலும், அவர்களுடைய குறைகள் சரியான முறையில் கேட்கப்படுவதில்லை என்று பலர் புலம்புகின்றனர்.  

காவலர்களின் நலனுக்காக சில பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைக் காவல்துறையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிக்காக சிறந்த பயிற்சி நிபுணர்களை மேம்படுத்த வேண்டும். கொடுக்கப்படும் பயிற்சி வகுப்பானது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது கொடுக்க அனுமதிக்க வேண்டும். மனம் சார்ந்த பல்வேறு உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து கொடுக்கப் பயிற்சியுடன் கூடுதலாக இணைக்க வேண்டும். அதேபோல், ஆயுதங்களைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தவும், அதற்கான பயிற்சியையும் முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக விளையாட்டுகள், கவுன்சிலிங், பொழுது போக்குகள் போன்ற சில ஏற்பாடுகளை செய்துகொடுக்கலாம்.

காவல்துறையின் மோசமான சில செயல்பாடுகள் சில இடங்களில் நடந்தாலும் அவர்களின் பிரச்னையும் பேசப்பட வேண்டிய விஷயமாகவே உள்ளது. மக்கள் நலனுக்காக வேலை செய்யும் காவல்துறையின் பிரச்னையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!