'உங்கள் முடிவு நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும்'- சந்திரபாபு நாயுடுவை பாராட்டிய மம்தா | I welcome the TDP's decision to leave the NDA says Mamata Banerjee

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (16/03/2018)

கடைசி தொடர்பு:15:39 (16/03/2018)

'உங்கள் முடிவு நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும்'- சந்திரபாபு நாயுடுவை பாராட்டிய மம்தா

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அறிவித்ததற்கு மம்தா பானர்ஜி ஆதரவளித்துள்ளார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு தெலுங்கு தேசம் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், அக்கட்சியைச்
சேர்ந்த எம்.பி-க்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ். செளத்ரி ஆகியோர், மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமாசெய்தனர். இந்நிலையில், ஆந்திராவின் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி, லோக்சபா செயலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்
கட்சியின் இந்த முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தர முன்வந்துள்ளது. இதனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி
அதிகரித்துள்ளது.

இதேபோன்று, தெலுங்கு தேசம் கட்சி எடுத்துள்ள முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர், ''தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் இந்த முடிவு, நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும்'' எனத் தெரிவித்துள்ளார். மேலும் அட்டூழியங்கள், பொருளாதாரப் பேரழிவு மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக உழைக்க, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.