வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (16/03/2018)

கடைசி தொடர்பு:15:04 (20/04/2018)

மகிழ்ச்சியில் இந்தியாவுக்கு 133வது இடம்.. ஏன்?

இந்தியா

வ்வொரு வருடமும், 'உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்' என்று ஐ.நா பட்டியலிட்டு வருகிறது. 'மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது?' என்ற அடிப்படைத் தகுதிகளோடு இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  இந்த ஆண்டு அத்தகைய கருத்துக்கணிப்பை 'ஐ.நா-வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு' என்ற அமைப்பு நடத்தியது. சுமார் 156 நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் ஃபின்லாந்து நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 133-வது இடத்தைப் பிடித்து பின்னோக்கிச் சென்றுள்ளது. 

இந்தியா

'ஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு' 2018-ம் ஆண்டில் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகள் என்ற ஆன்லைன் கருத்துக்கணிப்பை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. தற்போது இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் ஃபின்லாந்து நாட்டு மக்களே மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், நம் அண்டை நாடான பாகிஸ்தான், 75-வது இடத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியா, மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 122- வது இடம் வகித்தது. அதுவே, இந்தாண்டில் 11 இடங்கள் பின்தங்கி 133-வது இடத்துக்குச் சென்றுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, கடந்தாண்டு 80-வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறி 75-வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ளன. 

இந்தியா

அதேபோல மலாவி, ஹைத்தி, லைபீரியா, சிரியா, ருவாண்டா, ஏமன், தான்சானியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கன் ரிபப்ளிக், புருண்டி ஆகிய நாடுகள் கடைசி பத்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பில் அமெரிக்கா 18-வது இடத்தையும், பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முறையே 19-வது மற்றும் 20-வது இடங்களையும் பிடித்துள்ளன. 2016-ம் ஆண்டு  கணக்கெடுப்பின்படி, உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் இந்தியா 188-வது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் 'உலகப் பொருளாதார மையம்' வெளியிட்ட 'வளரும் பொருளாதார நாடுகள்' வரிசைப் பட்டியலில் இந்தியா 62-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தியாவைவிட முன்னேறிய வரிசையில் இருந்தன. வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னோக்கிச் சென்றதால் இந்திய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதன் பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து 'உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகள்' என்ற பட்டியலில் இந்தியா முன்பைவிட அதிக அளவு பின்னோக்கிச் சென்றது. இந்தப் பட்டியல் இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தியா

சமீபகாலமாக இந்தியாவில் உள்நாட்டுப் பிரச்னைகள் அதிக அளவில் உருவாகின. அரசியல், விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் பொதுமக்களை, அரசியல்வாதிகள் நாளுக்கு நாள் நசுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்வதே பொதுமக்களின் அன்றாட சாதனை போன்ற சூழல் உருவாகி விட்டது. இன்னும் என்னென்ன கணக்கெடுப்புகளிலெல்லாம் இந்தியா பின்னோக்கிச் செல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்