வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (16/03/2018)

கடைசி தொடர்பு:21:06 (16/03/2018)

``நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருப்பார்?!” - முன்னாள் டி.ஜி.பி.யின் சர்ச்சை பேச்சு

சங்கிலியானா
PC: navbharattimes.indiatimes.com

பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள், பெண்களைச் சிறப்பிக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. இதில், சிலரே உண்மையான அக்கறையுடன் சாதனை படைத்த, படைக்கும் பெண்களை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். பெரும்பாலும் வியாபார மற்றும் விளம்பர நோக்கங்களுக்கு நடத்தப்படுக்கின்றன. சமீபத்தில், கர்நாடகாவில் நடந்த பெண்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி இதில் இரண்டாம் ரகம். அதில் பங்கேற்ற முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநரின் பேச்சு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நிர்பயாவின் தாயார் நல்ல உடல்வாகுடன் இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது, நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திப்பார் என்று என்னால் கற்பனை செய்யமுடிகிறது” என்று பேசியதை அரங்கில் அமர்ந்திருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. 

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர், சங்கிலியானா (Sangaliana). பெண்களைச் சிறப்பிக்கும் அந்த நிகழ்ச்சியில் இப்படிப் பேசியவர், ஒரு படி மேலே சென்று, “ஒருவேளை நீங்கள் உங்களைவிட அதிகாரம்/பலம் வாய்ந்தவர்களை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால், சரணடைந்துவிடுங்கள். மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். அப்போதுதான், பெண்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்; கொல்லப்படாமல் இருப்பீர்கள்” என்று திருவாய் மலர்ந்து 'தைரியம்' கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியான ஒரு விஷயம், சாங்கிலியான பணியில் இருந்தபோது, லஞ்சம் மற்றும் ஒழுகின்மைக்கு எதிராக திறம்பட செயல்பட்டவர் என அறியப்படுவர். 

நிர்பயா2012-ம் ஆண்டு, நாட்டையே உலுக்கிய புதுடெல்லி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்து, பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். “இரவில் அந்தப் பெண் வெளியில் வந்ததால்தான், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்”, ”அந்த இரவில் ஆண் நண்பருடன் ஏன் வெளியில் செல்ல வேண்டும்?” ”நிர்பயா தனக்கு அளித்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினார்” எனப் பல பிரபலங்கள் அந்தக் கொடுமையான சம்பவத்துக்கு காரணமே, அந்தப் பெண்தான் என்கிற தொனியில் கருத்துகளைக் கூறியிருந்தனர். 

சில நாள்களுக்கு முன்பும், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், “நிர்பயா அந்த இரவில் வெளியில் செல்லாமல் இருந்திருந்தால் இப்படி நடத்திருக்காது” என்று கூறியது சர்ச்சைக்குரியதானது. ”பெண்களுக்குத் தன்னபிக்கையையும் தைரியத்தையும் கற்றுத்தரவேண்டிய ஒரு கல்வியாளர், பிற்போக்கான சிந்தனையில் ஊறியிருக்கிறாரே. இவ்வளவுதானா நம் கல்விமுறை?” என்ற கேள்வி எழுந்தது. 

இப்படித்தான் பெண்கள் குறித்தும் பாலினம் குறித்தும் பல ‘கட்டுக்கதை’ கருத்தியல்களை நம் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஒரு பெண் இரவில் வெளியில் சென்றாலே, அவளின் குணத்தையும் நடத்தையையும் சந்தேகிக்கிறோம். அவள் தன் சுதந்திரத்தைத் தேடி மேலே சென்றால், அதனைச் சீர்குலைக்கும் உரிமை ஆண்களுக்கு இருக்கிறது என உரிமை அளிக்கிறோம். அதனால்தான், பொறுப்பான பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஓர் அதிகாரியால் இப்படிப் பேச முடிகிறது. அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிய பிறகும் வருத்தம் தெரிவிக்காமல், நியாயப்படுத்துகிறார் சங்கிலியானா. 

“நான் என் கருத்தில் அளவு தாண்டி பேசவில்லை. ஒன்றுமே இல்லாத விஷயத்தை பூதாகரம் ஆக்குகின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இப்படிக் கூறினேன். அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு தேவை” என்று கூறியிருக்கிறார். 

இதோ, தமிழ்நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமைச்சர் விஜய பாஸ்கரிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவருக்குக் கேள்விக்கான பதிலை அளிக்காமல், “இந்த ஸ்பெக்ஸ் உங்களுக்கு அழகாக இருக்கு. நீங்க அழகா இருக்கீங்க” என்று கூறியிருக்கிறார். அந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்க்கவே, அப்படிக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மாண்புமிகு அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு, ஒரு கேள்விக்கான பதிலை நாகரிகமாகத் தவிர்க்க தெரியவில்லை. கேட்டவர் பெண் என்பதால், ஜோக் என நினைத்து அழகு பற்றி பேசுகிறார். 

அதிகாரத்திலும் மாநிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்களே, பெண்கள் பற்றி இவ்வளவு பிற்போக்கான சிந்தனையைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவது, இங்கே பெண்கள் முன்னேற்றம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இவர்களுக்குப் பாலினம், பாலியல் சுதந்திரம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவது என்பது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற கதைதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்