`எனக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை; மக்கள் மட்டுமே இருக்கிறார்கள்!’ - சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கும் பவன் கல்யாண்

பா.ஜ.க-வுடன் தற்போதைக்குக் கூட்டணி கிடையாது என ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 

பவன்கல்யாண்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன்கல்யாண். ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர், ஜன சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஒரு புறம் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், ரத யாத்திரை செல்லுதல் என அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மகனுடன் இணைந்து ஊழல் செய்துவருவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார் எனப் பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆந்திர மக்களிடம் பா.ஜ.க-வுக்கு எதிரான அலையே வீசுகிறது. இதனால் அவர்களுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். சிறப்பு அந்தஸ்து விவகாரத்தைத் தெலுங்கு தேசமும் ஒய்.எஸ்.ஆர் கட்சியும் சரியான முறையில் கையாளவில்லை. இரு கட்சிகளும் ஆந்திர மக்களின் எண்ணத்தை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜன சேனா போட்டியிட்டிருக்கலாம். ஆனால், போட்டியிடாமல் பா.ஜ.க - தெலுங்கு தேசம் கூட்டணிக்கு ஆதரவளித்தது. அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள். என்னை பா.ஜ.க தூண்டிவிடுவதாகக் கூறுகிறார்கள். என்னை யாரும் தூண்டிவிடவில்லை. என் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. மக்கள் மட்டுமே இருக்கிறார்கள்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!