வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (19/03/2018)

கடைசி தொடர்பு:17:20 (19/03/2018)

நான்காவது ஊழல் வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி!

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனவும், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுதலை என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக பல வழக்குகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் முன்னரே வெளியானது. அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு முதல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2வது வழக்கில் 3 1/2 ஆண்டுகள் தண்டனையும், 3வது வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனைகளை அடுத்து லாலுபிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று நான்காவது வழக்கின் தீர்ப்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அதிலும், லாலு பிரசாத் குற்றவாளி என்றும் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா விடுதலை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக உள்ள அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.