கனிமொழி, ஆ.ராசா விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு | enforcement directorate appeals delhi high court against 2g scam judgement

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (19/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (19/03/2018)

கனிமொழி, ஆ.ராசா விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து, டெல்லி  உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. 

கனிமொழி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவுசெய்து விசாரித்தது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தன.

ராசா

இதையடுத்து, சிபிஐ தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது எந்த ஒரு ஆதாரத்தையும் சிபிஐ தாக்கல் செய்யவில்லை என்று கூறி, டிசம்பர் 21-ம் தேதி, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரை விடுவித்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், இவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் குவிந்தன. விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.