'வேலை வேண்டும்'- ரயில் சேவையை ஸ்தம்பிக்கவைத்த மும்பை இளைஞர்கள்

மும்பையில், ரயில்வே துறையில் வேலை தரக் கோரி, நூற்றுக்கணக்கான  இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ரயில் மறியல்

ரயில்வே துறையில் வேலை தரக் கோரி,  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்று காலை 7 மணியளவில், மும்பை உள்ளூர் ரயில் சேவையை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள்,  மாதுங்கா - தாதர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களில் அமர்ந்து தங்களின் போராட்டத்தை வெளிப்படுத்தினர். 

கடந்த நான்கு வருடங்களாக, ரயில்வே துறையில் எந்த வேலை வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இதனால், இதுவரை 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இனி,  இது தொடரக் கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல், தங்களை நேரில் வந்து  சந்திக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும்  தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அரசாங்க வேலை வேண்டும் என்றும் ரயில்வே துறைக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பிவருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய மத்திய ரயில்வே துறை தலைமைச் செயலர் சுனில் உடாசி, நாங்கள் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ரயில்வே பாதையிலிருந்து  இளைஞர்களை அப்புறப்படுத்தி, ரயில் சேவையைத் துவங்கும் பணிகளையே நாங்கள் முதலில் செய்துவருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தண்டவாளங்களிலிருந்து இளைஞர்கள் அகற்றப்பட்டனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் ரயில்வே நிலையத்திற்கு அருகில் நின்று போராட்டம் நடத்திவருகின்றனர். 

இளைஞர்களின் போராட்டத்தால், மும்பை உள்ளூர் ரயில் சேவை முற்றிலும் பாதிப்படைந்திருந்தது. மேலும், இந்த ரயில் சேவையை மட்டும் நம்பியுள்ள சுமார் லட்சக்கணக்கான பயணிகள், அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து, ரயில் சேவை மீண்டும் துவங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!