`மத்திய அரசும் தெரிவிக்கல; இனி யாரை நம்புவது' - இராக்கில் சகோதரரை இழந்த சகோதரி கண்ணீர் | I am waiting to speak with sushma, says manjinder singh sister

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/03/2018)

கடைசி தொடர்பு:15:04 (20/03/2018)

`மத்திய அரசும் தெரிவிக்கல; இனி யாரை நம்புவது' - இராக்கில் சகோதரரை இழந்த சகோதரி கண்ணீர்

மஞ்சிந்தர் சிங்

இராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக, மாநிலங்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். 

இதையடுத்து, கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களை, இந்தியாவுக்குத் திரும்ப கொண்டு வர அமைச்சர் வி.கே.சிங் இராக் சென்றுள்ளார். மேலும், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களைத் திரும்பக் கொண்டுவரும் பணியில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 

குர்பீந்தர் கவுர்

இந்நிலையில், கொல்லப்பட்ட 39 பேரில் ஒருவரான மஞ்சிந்தர் சிங் என்பவரின் தங்கை குர்பீந்தர் கவுர், இச்சம்பவம் குறித்து கூறுகையில், 'கடந்த நான்கு ஆண்டுகளாக என் சகோதரர் உயிருடன் இருப்பதாகவே வெளியுறவுத்துறை அமைச்சகம் எங்களிடம் தெரிவித்து வந்தது. இப்போது கடத்தப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். இனி எதை நம்ப வேண்டும் என்று தெரியவில்லை. நான் சுஷ்மா ஸ்வராஜிடம் பேசுவதற்காகக் காத்திருக்கிறேன். சகோதரன் கொல்லப்பட்டதை எங்கள் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவே இல்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில், கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற தகவலை அறிவித்தபோதுதான் எங்களுக்குத் தெரியும்' என்றார். 

'2011-ம் ஆண்டு எனது கணவர் வேலைக்காக இராக் சென்றார். அவரிடம் கடைசியாக ஜூன் 15, 2014 நாள் அன்று பேசினேன்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றே நம்பினோம். அரசாங்கத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை' என, ஐ.எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட டேவிந்தர் சிங் மனைவி மன்ஜீத் கவுர் தெரிவித்தார். 

'2013-ம் ஆண்டு எனது கணவர் சுர்ஜித்குமார் இராக் சென்றார். 2014-ம் ஆண்டு, அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டர். நாங்கள் அரசங்கத்திடம் இருந்து எதையும் கேட்கவில்லை. எந்த ஆதரவும் இல்லை. எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது' எனக் கண்ணீர் மல்க சுர்ஜீத் குமார் மென்கா தெரிவித்தார். 

இந்தியர்கள் கொல்லப்பட்டதைக் கால தாமதமாக நாடாளுமன்றத்தில் சுஷ்மா அறிவித்ததுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.