வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (21/03/2018)

கடைசி தொடர்பு:09:00 (21/03/2018)

' ஐ.எஸ் அமைப்பை ஒழிக்க இதைச் செய்ய வேண்டும்' - சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி

'அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இந்தியாவும் இணைந்தால், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை நிச்சயமாக ஒழிக்க முடியும்' எனச் சொல்கிறார், பா.ஜ.க எம்.பி., சுப்ரமணியன் சுவாமி. 

சுப்ரமணியன் சுவாமி

ஈராக்கில், கடந்த 2014-ம் ஆண்டு, ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். கடத்தப்பட்ட 38 பேரின், டி.என்.ஏ மாதிரிகள், அங்கு இறந்தவர்களின் டி.என்.ஏ-வுடன் நூறு சதவிகிதம் பொருந்துவதாகவும், 39-வது நபரின் டி.என்.ஏ  70 சதவிகிதம் பொருந்துவதாகவும் தெரிவித்தார். மேலும், கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களைத் திரும்பக் கொண்டுவர அமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்றுள்ளார். 

இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர்கள் பலர், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டுக்குத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்துப் பேசிய, பா.ஜ.க. கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ''நம்மிடம் மனிதவளமும், அமெரிக்காவிடம் ஆயுத பலமும், இஸ்ரேலிடம் உளவுத்துறை தகவல்களும் உள்ளன. அதனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை முழுமையாக முறியடிக்க வேண்டும். எனவே, சக்திவாய்ந்த வல்லமையைக்கொண்ட இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்தால், ஐ.எஸ் அமைப்பை அடியோடு ஒழிக்க முடியும். ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் எந்த நாட்டிற்கும் நமது படைகளை அனுப்பத் தயங்கக் கூடாது'' என்றார்.