வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (21/03/2018)

`ஊழலுக்காகச் சிறை சென்றவர்களை வைத்துக் கொண்டே மோடி ஊழலைப் பற்றி பேசுகிறார்’ - ராகுல் காந்தி விமர்சனம்

ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்களை மேடையில் அமரவைத்துக் கொண்டே பிரதமர் மோடி ஊழல் குறித்துப் பேசுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

ராகுல் காந்தி

Photo: Twitter/INCIndia

கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசி வருகிறார். அதன் ஒருபகுதியாக சிக்கமகளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். 

அவர் பேசுகையில், ``மக்கள் பொய்களையும், வெறுப்புப் பேச்சுகளையும் கேட்க விரும்பவில்லை. அவர்கள் உண்மையான பிரச்னைகள் குறித்துப் பேச விரும்புகிறார்கள். காங்கிரஸ் இயக்கத் தொண்டர்களின் கடின உழைப்பாலும், ஒற்றுமையாலும் நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நான் திடமாக நம்புகிறேன். ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்களை மேடையில் அமரவைத்துக்  கொண்டே பிரதமர் மோடி, ஊழலைப் பற்றிப் பேசி வருகிறார். எடியூரப்பா மற்றும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோரின் சொத்துகளில் பிரதமர் மோடி ஊழலைப் பார்க்கவில்லை. கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு நாட்டை விட்டே தப்பியோடிய நிரவ் மோடி செய்ததை மோடி ஊழலாகக் கருதவில்லை. ரஃபேல் போர் விமானத்தின் விலையை அவர் கூறப்போவதில்லை. அதேபோல், தனது தொழிலதிபர் நண்பருக்கு அந்த ஒப்பந்தத்தை ஏன் அளித்தார் என்பதையும் கூறப்போவதில்லை.

கர்நாடகாவில் தொடக்கக் கல்வி முதல் முதுகலைப் படிப்பு வரை இலவசக் கல்வியை மாநில அரசு அளித்து வருகிறது. ஆனால், குஜராத் மாநிலத்தில் 90 சதவிகித கல்வி நிலையங்கள் தனியார் வசம் இருக்கின்றன. அங்கு பட்டப்படிப்பை முடிக்க ஒருவர் ரூ.15 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். டோக்லாம் எல்லைப் பகுதியில் ஹெலிபேடுகளையும், விமான நிலையங்களையும் சீனா அமைத்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறார். முக்கியமான பிரச்னைகள் குறித்து பிரதமர்  மோடி பேசுவதில்லை. சிருங்கேரி சாரதா மடத்தில் ஆன்மிகம் பயின்றுவரும் மாணவர்களை நான் சந்தித்தேன். அதில், 14 வயது மாணவர் ஒருவர் `உண்மையே தர்மம்’ என்று கூறினார். மதம் மற்றும் ஆன்மிகம் குறித்து பிரதமர் மோடியை விட சிறுவர்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். சத்யமேவ  ஜெயதே என்பதன் பொருளைப் பிரதமர் மோடி அறிந்துகொள்ளவில்லை. எனது பாட்டி இந்திரா காந்தியின் சோதனையான காலகட்டத்தில் நீங்கள் அவருக்குப் பக்கபலமாக நின்றீர்கள். அந்தச் சோதனையான காலகட்டத்தில் பெருவாரியான வெற்றியை அவர் பெற நீங்கள் உதவினீர்கள். அதேபோல் என்னையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பேசினார்.