வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (21/03/2018)

கடைசி தொடர்பு:21:02 (21/03/2018)

”ஒரு கிலோ காலிஃபிளவர் விலை 1 ரூபாய்!’’ தோட்டத்தையே காலிசெய்த விவசாயி

விவசாயி

அமைதியாக 180 கிமீ தொலைவுக்கு பேரணியாகச் சென்ற மகாராஷ்டிரத்தின் நாற்பதாயிரம் விவசாயிகள் நாடு முழுவதையும் தங்களின் பக்கம் ஈர்க்கவைத்ததை மறக்கமுடியாதநிலையில், இன்னொரு விவசாயியின் செய்கையானது மீண்டும் அந்த மாநிலத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். உச்சகட்டமாக, கடந்த வாரம் நாசிக்கிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகள், ஆறு நாட்களில் 180 கிமீ தொலைவைக் கடந்து மாநிலத் தலைநகர் மும்பையை அடைந்தனர்.

சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருந்தவர்கள், அரசு தங்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் அதைக் கைவிட்டனர். இந்த நிலையில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள கெகான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரேம்சிங் லக்கிராம் சவான் மூலம், அந்த மாநிலத்திலும் வடமாநிலங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

பிரேம்சிங், தன்னுடைய நிலத்தில் தக்காளியும் காலிஃபிளவரும் பயிரிட்டிருந்தார். காய்த்து கனிந்திருந்த  நானூறு கிலோ தக்காளியை கடந்த வாரம் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்துச்சென்றார். எல்லாம் போக அவருக்கு 442 ரூபாய் மட்டுமே கிடைத்தது. கொடுமை, என்னவென்றால் அவ்வளவு தக்காளியையும் சந்தைக்குக் கொண்டுசெல்வதற்கு மட்டும், பிரேம்சிங் சவானுக்கு 600 ரூபாய் செலவானது. தக்காளிக்கு மட்டுமல்ல, காலிஃபிளவருக்கும் கிலோவுக்கு ஒரு ரூபாய்தான் கிடைக்கும் என்பதை அறிந்தவர், கோபமும் ஆத்திரமுமாக வீடுதிரும்பினார். 

வீட்டுக்குத் திரும்பியும் ஆத்திரம் அடங்காதவராக, பிரேம்சிங் நேராக தன் தோட்டத்துக்குச் சென்றார். மண்வெட்டியை எடுத்து காலிஃபிளவர் செடிகளை எல்லாம் கண்டபடி வெட்டியெறிந்து, நாசம் செய்தார். காலிபிளவர் செடிகள் அனைத்தையும் வெட்டிஎறியும்வரை அவரின் ஆத்திரம் தீரவில்லை. 

 

மகாராஷ்டிர விவசாயி

காலிஃபிளவர் செடிகளை விவசாயி பிரேம்சிங் வெட்டியெறிந்தபோது, அவருடைய நண்பர் ஒருவர் செல்பேசியில் படம்பிடிக்க... ஒருவர் மூலம் ஒருவராக சமூக ஊடகங்களில் அந்தக் காட்சி  பரவியது. மகாராஷ்டிர மாநிலத்தைத் தாண்டி பல வடமாநிலங்களிலும் பிரேம்சிங்கின் காட்சி பரவலானது. 

ஊடகங்களுக்குப் பேசிய விவசாயி பிரேம்சிங்,“அன்றைக்கு எனக்கு கடுமையான கோபம் உண்டானது. என்ன செய்வதென்றே தோன்றவில்லை.. அந்தப்பொழுதில் ஒரு விவசாயியாக இருப்பதை எண்ணி அவமானமாக இருந்தது. என் மகனுடைய பள்ளிச்செலவுக்கு மாதம்தோறும் செலவழிக்கக்கூட என்னிடம் பணம் இல்லை. என்னுடைய தோட்டத்தில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது; ஒருவேளை அதை எடுத்து குடித்தாலும் குடிந்திருப்பேன். இதுதான் நிலைமை. 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து தக்காளியையும் கால்பிளவரையும் பயிர்வித்தேன். இரண்டுமே சேர்த்து வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கே விற்றது. மத்திய அரசு எங்களுடைய துன்பத்தை உணர்ந்து, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலைகிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்”என்று விசனத்தோடு கூறினார். 


டிரெண்டிங் @ விகடன்