வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (22/03/2018)

கடைசி தொடர்பு:12:33 (22/03/2018)

“பாதிக்கப்பட்டதோ ஒன்பது பெண்கள்... ஆனால், எதிராளிக்கு 5 நிமிடத்தில் ஜாமீன்!” JNU போராட்டம் #SexualHarassment #MeToo

கடந்த ஒரு வாரமாக ஜே.என்.யூ பல்கலைக்கழகமே போராட்டக்களமாக காட்சி அளிக்கிறது. வலதுசாரிகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் என்பது ஜே.என்.யூ-வில் இயல்பான நிகழ்வுதான். ஆனால், இந்த முறை போராட்டம் நடப்பது, லைஃப் சயின்ஸ் துறை (Department of Life Sciences) பேராசிரியரான அதுல் ஜோஹ்ரிக்கு எதிராக. அவர் பாலியல் வன்முறை செய்ததாக புகார் அளித்துள்ளார்கள்.

ஜோஹ்ரி மீதான பாலியல் வன்முறை புகாரை விசாரிக்கக்கோரி போராடும் JNU மாணவர்கள்

சில நாள்களாகப் பல்கலைக்கழகத்துக்கு வராதிருந்த அந்தத் துறை முனைவர் மாணவி ஒருவர் கடந்த வாரம் வியாழக்கிழமை தான் இடைநிற்கப் போவதாகத் தெரிவித்தார். அதற்கான காரணம் பேராசிரியர் அதுல் ஜோஹ்ரி என்றும் கூறினார். அந்த மாணவியைத் தொடர்ந்து, பலரும் அவர் மீது புகார் அளித்தனர். கடந்த சனிக்கிழமை புகாரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. பேராசியரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், கைது செய்யவேண்டும் என்றும், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்விட்டரிலும் இந்தப் பிரச்னை ஐந்து நாள்களாக ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது.20.03.18 அன்று  மாலை பேராசிரியர் ஜோஹ்ரி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து இன்றும் போராட்டம் தொடர்கிறது. இது குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் பேசினோம்.

சுதன்யா பால் - JNU மாணவர்“கடந்த வியாழக்கிழமையன்று  பேராசிரியர் ஜோஹ்ரி வெகுநாள்களாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டுவருவதாக ஏழு பெண்கள் புகாரளிக்கச் சென்றனர். கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் தொடர் வாக்குவாதத்துக்குப் பிறகுதான், அவர்களது வழக்கினை காவல்துறை பதிவு செய்தது. ஆனால், முறையான விசாரணை நடைபெறவில்லை. எனவே, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்றாக காவல்நிலையத்துக்கு வெளியே போராட்டத்தினைத் தொடர்ந்தோம். பிணையிலேயே வர முடியாத இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தும், பேராசிரியர் ஜோஹ்ரியை விசாரணை செய்ய காவலில் வைத்திருக்கத் தேவையில்லை என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கைகள் ரொம்பவே எளிமையானது. விஷாகா கமிட்டியின் பரிந்துரைகள் படி, ஒருவர் மீதான புகார் எழுப்பப்படும்போது, விசாரணை முடியும் வரை அவர் இருக்கும் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.  ஆனால், இவ்வளவு நடந்தும் ஜோஹ்ரி, பேராசிரியர் மற்றும் எங்கள் கல்லூரியில் உள்ள சந்திரபாகா விடுதியின் வார்டன்  உள்ளிட்ட பல பொறுப்புகளில் நீடித்துவருகிறார். காவல்துறையும் ஏபிவிபியும் இந்த வழக்கினை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். அப்படி இல்லாமல், இந்த வழக்கினை நேர்மையாக விசாரித்து பேராசிரியர் ஜோஹ்ரிக்கு தண்டணை வழங்கப்பட வேண்டும்” என்கிறார் இறுதியாண்டு முதுகலை சமூக அறிவியல் படித்து வரும் சுதன்யா பால்.


சாய் பாலாஜி - JNU மாணவர்”நேற்று முன் தினம் நடந்தது, பாலியல் சமத்துவத்துக்கு எதிராக நடந்த ஒரு பெரிய கேலிக்கூத்து. ஒருவர் மீது எட்டு எஃப்.ஐ.ஆர்கள் பதிவுசெய்யப்படுகின்றன. அவரைக் கைது செய்ய காவல்துறை ஐந்து நாள்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், ஐந்தே நிமிடங்களில் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர்கள் மொத்தமாக விசாரித்த நேரத்தை எடுத்துக்கொண்டால், ஒரு புகாருக்கு ஏழரை நிமிடங்களே. எப்படி அதற்குள் அத்தனை வழக்குக்கும் விசாரணையை முடித்திருக்க முடியும்? மேலும், டெல்லி காவல்துறை, அந்தப் பேராசிரியரை விசாரணை கைதுக்கு கோராமல், நீதிமன்றக் காவலுக்குத்தான் கேட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகே, ஒரு புகாரினைப் பதிவுசெய்ய காவல்துறைக்கு ஆறு மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது. மூன்று நாளுக்குப் பிறகுதான் CrPC 164 பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. இப்படி டெல்லி காவல்துறை ஜோஹ்ரிக்கு ஆதரவாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளது. ஜே.என்.யூ நிர்வாகமோ இந்தப் பிரச்னை தொடங்கிய நாளிலிருந்தே மௌனம் காக்கிறது. இது, அரசியல் காரணங்களால் செய்யப்பட்ட புகார் என்கிறார்கள். எட்டுப் பெண்கள் வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளார்கள். பத்திரிகைகளில் பேசுகிறார்கள் எனும்போது, இது எப்படி அரசியலாக இருக்க முடியும்? நிர்வாகத்துக்கு நெருக்கமாக இருக்கும் பேராசியருக்கு எதிராகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதுதான் அவர்களின் கவலை. அந்தப் பேராசிரியரை இன்றுவரை துணைவேந்தர் இடைநீக்கம் செய்யவில்லை. ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் வழக்கப்படி, இப்படி ஒருவர் மீது குற்றம்சாட்டு எழுந்தால், செல்வாக்கினைப் பயன்படுத்தி அந்த நபர் புகாரினை ஒன்றுமில்லாமல் செய்யக்கூடும் என்பதற்காக, உடனடியாக இடைநீக்கம் செய்வார்கள். ஆனால், இந்த வழக்கில் அப்படி எதுவும் நடக்கவில்லை. பிறகு எப்படி நியாயமான சுதந்திரமான விசாரணையை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகமே இவருக்கு ஆதரவு வழங்குகிறது” என்கிறார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரண்டாமாண்டு (M.Phil) மாணவர், சாய் பாலாஜி.

 

Gender Sensitisation Committee Against Sexual Harassment என்கிற பாலியல் வன்முறைப் புகார்களை விசாரிக்கும் கமிட்டி, துணைவேந்தரால் கலைக்கப்பட்டு, Internal Complaints Committee என்கிற புதிய கமிட்டி கடந்த செப்டம்பரில் உருவாக்கப்பட்டது. இதற்கு எதிராகவும் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள்.

 

”இதற்கு முன்பு, மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே அந்த கமிட்டியில் இருந்தார்கள். தன்னாட்சியாக இயங்கும் அந்த அமைப்பைக் கலைத்துவிட்டு, பல்கலைக்கழகத்தாலேயே நியமிக்கப்படுவதாக ஓர் அமைப்பினை உருவாக்கினார் தற்போதைய துணைவேந்தர். இதன்படி, ஜோஹ்ரி போன்ற ஒருவரை, அவருடன் வேலை பார்ப்பவர்களே விசாரிப்பார்கள். பாலியல் வன்முறை என்பது மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய தீவிரமான பிரச்னை. இன்றைய நேரத்தில், ஒவ்வொரு கல்லூரியிலும், பாலியல் வன்முறை வழக்குகளைப் பதிவுசெய்ய தன்னாட்சியான அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்” என்கிறார் சாய் பாலாஜி.

 

அதுல் ஜோஹ்ரி, பேராசியர் மட்டுமல்ல; பல்கலைக்கழகத்தின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துவருகிறவர். பதவியும் பலமும் பாலியல் வன்முறைக்கு ஆளாகுபவர்களை எந்த அளவுக்குக் காப்பாற்றி, மௌனிக்கச் செய்கிறது என்பதற்கான பல்வேறு உலக சாட்சிகளில் இதுவும் ஒன்றாக மாறிவிடக் கூடாது. துணைவேந்தர் முறைகேடாக சில பேராசிரியர்களை நியமித்திருப்பதாகக் கூறி, அதற்கு எதிரான போராட்டங்களும் ஜே.என்.யூவில் தொடர்ந்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்